ஜிகர்தண்டா 2X


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் படத்தை இயக்குவதுடன், படத்தை தயாரித்துளார். 


அண்மையில் வெளியான படத்தின் டீசரில், 1975ம் காலகட்டத்தில் நடந்த சம்பவம் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த பாகத்தில் எஸ்.ஜே. சூர்யா இயக்குநராக இருக்கிறார். அவருடைய உடைகள் 70 காலகட்டத்தை நினைவுப்படுத்துகிறது. முதல் பாகத்தில் கேங்ஸ்ஸ்டராக பாபி சிம்ஹா இருந்ததை போல், இரண்டாம் பாகத்தில் கேங்ஸ்டராக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரிலீசாகும் என படக்குழு அறிவித்திருந்தது. 


இதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தின் தமிழகத்தின் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.


எஸ்.ஜே சூர்யா


கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா படம் குறித்து சமீபத்தில் பேசும்போது “ முதலில் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க ரெடியாக இருந்தார். இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எஸ்.ஜே சூர்யாவிடம் கேட்டிருந்தோம். இந்தப் படத்தில் நடிப்பது குறித்து தான் ஐந்து நாட்கள் யோசித்து சொல்வதாக அவர் சொன்னார்.  ஐந்து நாட்கள் யோசித்து சொல்லும்  அளவிற்கு தான் என்னுடைய கதை இருக்கிறதா? என்று நான் எஸ்.ஜே. சூரியாவிடம் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.


இது எழுத்தாளர்களுக்கு எப்போதும் தன்னுடைய கதைகளின் மேல் இருக்கும் ஒரு பற்று தான். இதுதான் நான் அப்படி சொன்னதற்கான காரணம். ஐந்து நாட்கள் யோசிக்க வேண்டும் என்றால் என்னுடைய கதையுடன் ஒருவரால் தொடர்பு படுத்திக் கொள்ள முடியவில்லை என்று தான் அர்த்தம். அப்படி உணராத ஒருவரிடன் நான் என்னுடைய படத்தில் நடிக்க வற்புறுத்த முடியாது. கதையை உள்வாங்கினால் தான் அதில் முழு ஈடுபாட்டுடன் நடிக்க முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.”


 நடந்தது என்ன?


”என்னுடைய நண்பர் ஒருவர் மீண்டும் எஸ்.ஜே. சூரியாவிடம் பேசியபோது தான், அவருக்கும் கதை ரொம்பப் பிடித்திருந்ததாகவும் தான் வேறு சில காரணங்களுக்காக அப்படி சொன்னதாகவும் தெரிவித்திருக்கிறார். நான் அவரிடம் நடிக்க வேண்டாம் என்று சொன்னப் பிறகு என்னிடம் எப்படி வந்து கேட்பது என்று தெரியாமல் அவர் தயங்கியிருக்கிறார். இதற்கு பின் மீண்டும் ஒரு முறை நேரில் சந்தித்து நானும் எஸ்.ஜே சூரியாவும் பேசினோம். அப்போது தனக்கு கதை ரொம்பப் பிடித்திருந்ததாக அவர் சொன்னார். இதற்கு பிறகு எல்லாம் சரியாகிவிட்டது.“ என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்