கரண் ஜோகர்


குச் குச் ஹோத்தா ஹேய், கபி குஷி கபி கம், கபி அல்விதா நா கெஹனா, மை நேம் இஸ் கான், ஏ தில் ஹேய் முஷ்கில் போன்ற புகழ்பெற்ற பாலிவுட் திரைப்படங்களை இயக்கியவர் கரண் ஜோகர். இந்தப் படங்கள் பாலிவுட் சினிமாவில் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் சினிமா ரசிகர்களை கவர்ந்த கமர்சியல் திரைப்படங்கள்.


இன்றுவரை கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் ஷாருக் கான் - கஜோல் ஆகிய இருவருக்கும் இடையிலான சூப்பரான கெமிஸ்ட்ரியை கரண் ஜோகரின் படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இப்படியான ஒரு இயக்குநர் காதலைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னால் கொஞ்சம் குழப்பாக தான் இருக்கும் இல்லையா. இதற்கு பின் கரண் ஜோகர் சொல்லும் காரணம் என்னத் தெரியுமா?


நான் காதல் உறவில் இருந்ததில்லை


கரண் ஜோகர் தன் 51 வயதில் சிங்கிளாக வலம் வரும் நிலையில், இவரது தனிப்பட்ட காதல் வாழ்க்கை குறித்து இப்படி பேசியுள்ளார். “நான் முழுமையான ஒரு காதல் உறவில் இருந்தது இல்லை. ஒரு சில உறவுகள் குறைந்த காலம் மட்டுமே நீடித்திருக்கின்றன. நான் எடுக்கும் படங்களில் பெரும்பாலான காதல் நான் பார்த்த படங்களை வைத்து நான் எழுதியவை.


என்னுடைய வாழ்க்கையில் இருந்து எதையும் நான் இந்தப் படங்களில் சேர்க்கவில்லை. இப்படியே போய்க் கொண்டிருந்தால் ரசிகர்கள் நிச்சயமாக நான் அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று கண்டுபிடித்து விடுவார்கள் என்று அனக்கு தெரியும். இதனால் தான் நான் எழுதிய கல் ஹோ நா ஹோ படத்தில் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களுடன் காதலைப் பற்றி நான் விவாதித்து உருவான ஒரு புரிதலையே எழுதினேன்.


காதலைப் பற்றியோ காதலில் ஏமாற்றத்தைப் பற்றியோ நான் எழுத வேண்டும் என்றால், முதலில் நான் காதலித்திருக்க வேண்டும் . நான் காதலித்து ஒருவரை ஏமாற்றியிருந்தால் தானே அதை நான் படமாக எடுக்க முடியும். நான் பாலிவுட் சினிமாவில் 20 ஆண்டுகளாக நான் எடுத்த ரொமாண்டிக் படங்களுக்காக கொண்டாடப்படுகிறேன் . ஆனால் காதலைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது தான் உண்மை” என்று கரண் ஜோகர் தெரிவித்துள்ளார்.


என் கதையைக் கேட்ட ரன்பீர் கபூர்


 நான் முதல் முறையாக ஒருவரை தீவிரமாக காதலித்தேன். அவர் ஒருபோதும் என்னுடன் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தபோது நான் மனமுடைந்து போனேன். அந்த நேரத்தில் நான் எதிர்கொண்ட எமோஷன்களைதான் ஏ தில் ஹே முஷ்கில் படத்தில் எழுதினேன்.


அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ரன்பீர் கபூருக்கு நான் ஒரு காட்சியை விளக்கிக் கொண்டிருந்தபோது ரன்பீர் கபூர் ”நான்  உங்களுடைய நிஜக் கதையில் நடிக்கிறேனா” என்று கேட்டார். நான் ஆமாம் என்றேன். அந்த இரவு ரன்பீர் கபூர் என்னைப் பார்க்க வந்தார். இரவு முழுவது நாங்கள் மது அருந்திக் கொண்டு என்னுடைய காதல் கதையை பேசிக் கொண்டிருந்தோம்.


அடுத்த நாளில் இருந்து ரன்பீர் கபூர் இன்னும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தினார். என்னுடைய கதையை முழுதாக தெரிந்த காரணத்தினால் அவரால் அப்படி நடிக்க முடிந்தது“ என்று கரண் ஜோகர் பேசியுள்ளார்.