பூமணி , கிழக்கும் மேற்கும் ,பூந்தோட்டம் , மிட்டா மிராசு ,முந்திரிக்காடு உள்ளிடா படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம் . இவர் ஒரு சில படங்களில் நடிகராகவும் களம் கண்டிருக்கிறார். இவர் தனக்கும் மணிவண்ணனுக்கும் இடையிலான நட்பு குறித்து நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.
”அதில் எனக்கும் அவருக்கும் அடிப்படையில் அரசியல் ரீதியில் ஒரு பிணைப்பு உண்டு. மணிவண்ணன் ஒரு தீவிர பொதுவுடமை சிந்தனைவாதி . பார்வையாளர்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா அவர் ஒரு நக்சலைட். கம்யூனிஸ்ட்காரர் அவர். மணிவண்ணன் சார் வெளியில் வாங்கிய சம்பளம் வேறு. என்னுடைய படத்திற்கு அவர் சம்பளமே பேசியது கிடையாது. அவர் நான் கொடுப்பதை வாங்கிக்கொள்வார். அவருடைய டப்பிங்கிற்காக காத்திருப்பேன்.
எல்லா இடத்துலையும் இயக்குநருக்காக நிப்பாரு. தேவையானிக்கு என் படமான பூமணியில் ஒரு பிரச்சனை. என்னவென்றே தெரியவில்லை பூமணியில் எல்லாமே பிரச்சனையாகத்தான் இருந்தது. பூஞ்சோலையில் இருந்து போதையாறு அப்படிங்குற மலை உச்சியில ஒரு காட்சியை எடுக்கணும். அந்த இடத்துல ஒரே அட்டை, புலிகள் நடமாடும் இடம் வேறு. மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில அந்த ஷூட்டிங் எடுக்குறோம். மதியம் 1 மணிக்குதான் அந்த பகுதியையே சென்றடைகிறோம். அப்போ என்னுடைய ஸ்டில் ஃபோட்டோகிராஃபர் தேவயானி இந்த பக்கம் திரும்புங்க அப்படினு ஃபோட்டோ எடுக்க கூப்பிட்டிருக்கிறார். அதற்கு தேவயானி நீ ஒரு சாதாரண ஸ்டில் ஃபோட்டோகிராஃபர், எப்படி என்னை பெயர் சொல்லி அழைக்கலாம். இயக்குநர், கேமரா மேனுக்குதான் அந்த உரிமை இருக்கிறது. மற்றவர்கள் யாருமே என்னை தேவயானி என கூப்பிடக்கூடாது அப்படின்னு சொல்லிட்டாங்க. அதுமட்டுமல்லாமல் மன்னிப்பு கேளு அப்படினு வேற சொன்னாங்க. அந்த பொண்ணுக்கு இந்தி , இங்கிலீஷ்தான் தெரியும். தமிழ் அவ்வளவா தெரியாது. இந்த சூழல்ல யாருமே மன்னிப்பு கேட்க கூடாதுனுதான் நினைக்குறாங்க. அங்க இருக்குற எல்லாமே என்னுடைய நண்பர்கள்தான்.
முரளி சார் அந்த பெண்ணை போய் சமாதானம் செய்யுறாரு. நேரம் வேற ஆகிட்டு இருக்கு. பத்திரிகையில் இந்த பிரச்சனை எல்லாமே பெரிய விஷயமா வெளியானது. 10 நாட்களுக்கு பிறகு மணிவண்ணன் சார் ஷூட்டிங் வந்தாரு. வந்த உடனே எங்கே இருக்காங்க அந்த பெண் தேவயானி, வர சொல்லுங்கன்னு சொல்லி , வந்த உடனே ஏம்மா பேருன்னு ஒன்னு, ஏன் வைக்குறதுன்னு கேட்டார். கூப்பிடத்தானே வைக்குறது. இல்லை பேர் வைக்கும் பொழுது இவங்க எல்லாம் பேர் சொல்லி கூப்பிடலாம் , இவங்கெல்லாம் கூப்பிடக்கூடாதுன்னு சொல்லுறோமா?
பேர் வைக்குறது கூப்பிடுவதற்குதானே ...என்னையும்தானே பேர் வச்சு கூப்பிடுறான். மணிவண்ணன் வந்துருக்கான்னு சொல்லுறான். அதுக்காக கோவப்பட முடியுமா? அதனால நீ நடந்துக்கிட்டதுக்கு நீதான் அவன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் அப்படினு சொன்னாரு. இது தேவயானிக்கு ஒரு தெளிவை ஏற்படுத்துச்சு. மணிவண்ணன் சார் மீது அவங்க கோவப்படல. அதன் பிறகு போட்டோகிராஃபர் காட்டிய ஆல்பத்தை பார்த்து மிரண்டு போய் , சாரி பூபதினு எல்லாருக்கும் முன்னால சொன்னார் தேவயானி. இயக்குநருக்கு பிரச்சனை என்றால் அவர் தீர்வு கண்டுபிடிப்பார்” என்றார் களஞ்சியம்.