சாமானியன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.எஸ் ரவிகுமார்  நடிகர் ராமராஜன் பற்றி பாராட்டி பேசியுள்ளார்.


மீண்டும் திரையில் மக்கள் நாயகன் ராமராஜன்


தமிழ் சினிமாவில் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி படையெடுக்க வைத்த நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் ராமராஜன் , எங்க ஊரு நல்ல ஊரு படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமான ராமராஜன் அடுத்தடுத்து கிராமத்து கதைகளை மையமாக கொண்ட படங்களில் நடித்து மக்கள் நாயகன் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரரானார்.


எங்க ஊரு பாட்டுக்காரன் , எங்க ஊரு காவல்காரன் போன்ற படங்களின் வழியாக தொடர்ச்சியாக சாமானிய மக்களின் நாயகனாக நடித்தார் ராமராஜன். அவர்  நடித்த கரகாட்டக்காரன் படம் 400 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடி சாதனைப் படைத்தது. நடிகராக 40 க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்த ராமராஜ், 10க்கும் மேற்பட்ட  படங்களை இயக்கியும் இருக்கிறார்.


சாமானியன்


பல வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த ராமராஜன் தற்போது நடித்துள்ள படம் சாமானியன். ராகேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ராமராஜன் , ராதா ரவி , மைம் கோபி , எம்.எஸ் பாஸ்கர், வெங்கட், கே.எஸ் ரவிகுமார் , அறந்தாங்கி நிஷா , தீபா ஷங்கர் , சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ் ரவிகுமார் ராமராஜன் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.


ராமராஜனைப் பார்த்து பயந்த ரஜினிகாந்த்






இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ் ரவிகுமார் “ 1987 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் ஆனது. எனது மனைவி திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். திருமணம் ஆன சில மாதம் கழித்து நான் அவருடைய சொந்த ஊருக்கு சென்றேன். அப்போது அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டிருந்தார்கள். கிரிவலத்திற்கு வருவதைப் போல் அப்படி ஒரு கூட்டத்தை நான் பார்த்ததில்லை. புதுப்படம் ஏதாவது ரீலிஸாகிறதா எதற்கு இவ்வளவு கூட்டம் என்று கேட்டபோது ராமராஜன் சார் மீட்டிங் என்று சொன்னார்கள்.


ரஜினி கூட ஒருமுறை ராமராஜனுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து இவருடனா நாம் போட்டி போடப் போகிறோம் என்று பயந்துவிட்டதாக என்னிட கூறினார். அப்படியான கூட்டத்தைப் பார்த்த ராமராஜனுக்கு இந்த நிகழ்ச்சிக்கும் வந்திருக்கும் கூட்டம் எல்லாம் அவ்வளவு பெரிது இல்லை” என்று  அவர் கூறினார்.