ஆட்டோ ஓட்டியும், டீ போட்டும், தனக்கு அணிவித்த சால்வைகளை முதியோர்களுக்கு அணிவித்தும் வித விதமாக வாக்கு சேகரித்த வேலூர் மக்களவைதொகுதி அதிமுக வேட்பாளர்.

 

நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் பசுபதி இன்று திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் தொகுதியிற்குட்பட்ட செங்கிலிகுப்பம், மின்னூர், விண்ணமங்கலம், கன்னடிகுப்பம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம் ஆகிய கிராமங்களில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

 

அப்பொழுது பிரச்சாரத்தில் பேசிய அதிமுக வேட்பாளர் பசுபதி, “வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவை சேர்ந்த கதிர் ஆனந்த் அரக்கோணம் நாடாளுமன்றத்தை சேர்ந்தவர் மற்றும் பாஜகவை சேர்ந்த ஏ.சி.சண்முகம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்தவர், இருவரும்  வேலூர் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்தவர்களே இல்லை, அவர்கள் இந்த தொகுதியில் வாக்கே இல்லை, அவர்கள் எப்படி நீங்கள் கூப்பிட்டதும் வருவார்கள்.



 

நான் வாணியம்பாடியை சேர்ந்தவன் 14 வருடம் செய்து வந்த  அரசு மருத்துவர் பணியை விட்டு விட்டு,  மக்களுக்கு சேவை செய்ய வந்து இருக்கின்றேன், யார் பணம் கொடுத்தாலும், வாங்கி கொள்ளுங்கள். ஆனால் ஓட்டு மட்டும் அதிமுகவிற்கு போடுங்கள்” என பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அதனை தொடர்ந்து பெரியாங்குப்பம் கிராமத்தில், டீக்கடையில் டீ போட்டும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து சிறிது தூரம் ஆட்டோ ஓட்டியும், தனக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும், தொண்டர் அணிவித்த சால்வையை முதியோர்களுக்கு அணிவித்தும் வித விதமாக வாக்கு சேகரித்தார். மேலும் இந்த பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.