இயக்குநர் ரஞ்சித் vs அண்ணாமலை
சமீபத்தில் ராமர் கோயில் திறப்பு விழாவின்போது இயக்குநர் ரஞ்சித் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில் “ராமர் கோயில் திறப்பு இன்று நடக்கிறது, ஆனால் அதன் பின்னாடி நடக்கும் மத அரசியல நாம கவனிக்க வேண்டி இருக்கு. அதற்கு இருக்கும் ஆதரவு, எதிர்ப்பு மீறி இதுமாதிரி ஒரு விஷயம் நடக்கக்கூடாதுனு நினைக்கறதே இன்னைக்கு பெரிய பிரச்னையா மாறிட்டு இருக்குங்கறத நான் பாக்கறேன். சிக்கலான ஒரு சூழல் இருக்கு. இன்றைக்கு முக்கியமான நாள். வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்றவில்லை என்றால் எல்லாரும் தீவிரவாதிகள் தான் எனவும், அந்த அளவிற்கு இன்றைக்கு பயங்கரமாக போய் கொண்டு இருக்கிறது.
தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயம் இருந்து கொண்டிருக்கிறது. இந்த பயமான காலகட்டத்தில் நுழைவதற்கு முன்னர், நம்மை நாம் சரி செய்வதற்கு, நம் மனதை பண்படுத்துவதற்கு, நம் மூளையில் ஏற்றி வைத்து இருக்கும் பிற்போக்குத்தனத்தையும், மதவாதத்தையும் அழிக்கும் கருவியாக சினிமாவை பயன்படுத்துகிறோம்” என்று அவர் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பா.ரஞ்சித்தின் கருத்துக்கு தனது விமர்சனங்களைத் தெரிவித்திருந்தார். அண்ணாமலை பற்றி, பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி பேசினால் ஃபேமஸ் ஆகலாம் என்று பேசுகிறார்கள் என்றும், தனது கனவிலே வந்த கருத்தை ரஞ்சித் பேசியதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். மார்கெட் இல்லாத காரணத்தினால் ஃபேமஸ் ஆவதற்காக ரஞ்சித் இப்படி பேசியுள்ளதாக அண்ணாமலை கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் பேசிய கருத்து தொடர்பாக பல்வேறு விவாதங்கள் அரசியல் மற்றும் சினிமா தளத்தில் தொடர்ந்தன.
அரசியல்வாதிகள் பற்றி பேசினால் ஒரு பப்ளிசிட்டி கிடைக்கிறது
இந்நிலையில், வைதீஸ்வரன் பட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் கே.எஸ் ரவிகுமார் இயக்குநர் ரஞ்சித் பேசியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
“அண்ணாமலை பேசியது எனக்கு தெரியாது. பா. ரஞ்சித் பேசியதை நான் பார்த்தேன். அது அவருடைய கருத்து என்று நான் அதை விட்டுவிடலாமே. அரசியல் மற்றும் சினிமா பற்றி மேடைகளில் பேசினால் தான் அது மக்களிடம் அதிகம் போய் சேருகிறது. முத்து படத்தின் போது நான் ஒரு ஹோட்டலில் ஒன்பதாவது மாடியில் உள்ள அறையில் கதை எழுதிக் கொண்டிருந்தேன்.
அப்போது ரஜினி அங்கு வந்து ஜன்னல் வழியாக வெளியே தெரியும் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஜன்னல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் என்னவென்று கேட்டபோது அவ்வளவு வீடுகள் இருப்பதைப் பார்த்து ரஜினி பிரம்மிப்படைந்தார். அதில் ஒரு வீடு சிவாஜி கணேசனின் வீடு மற்றொரு வீடு மனோரமா ஆச்சியுடையது. இவ்வளவு பெரிய அபார்ட்மெண்டில் ஒன்று இரண்டு பேர் தான் சினிமாக்காரர்கள். மீதி இருக்கும் பணக்காரர்களைப் பற்றி எல்லாம் நாம் யாரும் பேசுவது இல்லை. அந்த மூன்று நபர்களுக்கான பப்ளிசிட்டி ரொம்ப பெரிதாக இருக்கிறது. அதேபோல் அரசியலில் இருக்கிறவர்களைப் பற்றி பேசும்போது ஒரு பெரிய பப்ளிசிட்டி கிடைக்கிறது’ என்று இயக்குநர் ரவிகுமார் கூறியுள்ளார்