கே.எஸ்.ரவிகுமார்


குடும்பங்களை கவர்ந்த இயக்குநர்கள் என்று சொல்வார்கள் இல்லையா. அந்த மாதிரியான ஒரு இயக்குநர் கே.எஸ் ரவிகுமார். சிறிய ஸ்டார்கள் முதல் ரஜினி கமல் போன்ற பெரிய ஸ்டார்களை படங்கள் இயக்கி வெற்றிக்கொடுத்திருக்கிறார். தற்போது அவ்வப்போது ஒரு சில படங்களை தயாரித்தும் வருகிறார். கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் முத்து மற்றும் படையப்பா ஆகிய இருபடங்கள் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சாதனைப்படைத்த படங்கள். 


ஜெயிலர் படம் பற்றி கே.எஸ் ரவிகுமார்


நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரஜினி நடித்து வெளியான படம் ஜெயிலர். 2.0 படத்திற்கு பின்  ரஜினிகாந்த் நடித்து வசூல் ரீதியாக ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்ற படம் ஜெயிலர். இந்த படத்தின் கதை விவாதத்தில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் பங்கேற்றதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ரவிகுமார் மற்றும் நெல்சன் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்படவில்லை. தற்போது நெல்சன் தயாரிப்பில் அக்டோபர் 31 ஆம் தேதி பிளடி பெக்கர் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கே.எஸ் ரவிகுமார் மற்றும் நெல்சன் திலிப்குமார் இது பற்றி பேசியுள்ளார்கள்.


அப்போது பேசிய கே.எஸ் ரவிகுமார் " கஷ்டப்பட்டு ஒரு ஸ்க்ரிப்ட் பண்றீங்க. அந்த மாதிரி சம்பந்தமே இல்லாம சிலருக்கு பாராட்டுக்கள் வருமே. அப்டி பார்த்த உங்களுக்கு என்மேல செம கோபம் வந்திருக்கனுமே. ரஜினி சார் அடிக்கடி எனக்கு ஃபோன் செய்து நேரில் சந்திக்க வருவார். அந்த மாதிரி நாங்கள் சந்திக்கும்போது யாரோ பார்த்து ஜெயிலர் படத்தின் கதை விவாதத்தில் நான் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்கள். ரஜினி சார் என்னை அழைத்து ஜெயிலர் படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நான் ஒரு சில ஆலோசனைகளை அவரிடம் சொன்னேன். ஆனால் ஒரு முறைகூட நெல்சனிடம் ஜெயிலர் படத்தைப் பற்றி பேசியதில்லை. கடைசிவரையும் நான் ஜெயிலர் படத்தின் கதை விவாதத்தில் இருந்தேன் என்றே நம்பிவிட்டார்கள்." என்று கே.எஸ் ரவிகுமார் பேசினார்.






இதற்கு பதிலளித்த நெல்சன் "  அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாம் அன்றாடம் கடந்துபோகும் ஒரு செய்தியாகவே அதை எடுத்துக்கொண்டேன். உண்மை என்னவென்று எனக்கு தெரியும். உங்களுக்கு தெரியும் ரஜினி சாருக்கு தெரியும். அதனால் என்னைக்கா இருந்தாலும் அந்த உண்மை வெளியே தெரியதான் போகிறது என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது' என நெல்சன் தெரிவித்துள்ளார்.