தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. நடிகர் என்பதையும் கடந்து தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் பல நல்ல தரமான படங்களையும் தயாரித்து வருகிறார். இன்று சூர்யா தன்னுடைய 23வது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு பல சமூக நல திட்டங்களை செய்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள். மேலும் பல நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன.
அந்த வகையில் 2007ம் ஆண்டு ஹரி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் சூர்யா, அசின், வடிவேலு, கலாபவன் மணி, சரண்யா பொன்வண்ணன், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'வேல்'. இரட்டை வேடத்தில் சூர்யா நடித்த அப்படம் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 19ம் தேதியன்று புது பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆக்ஷன், காமெடி, ஃபேமிலி சென்டிமென்ட், ரொமான்ஸ் என முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக வெளியான 'வேல்' படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கிராமத்து ஹீரோ கதாபாத்திரத்தில் பக்காவாக செட்டாக கூடிய சூர்யா இப்படத்தில் தன்னுடைய வழக்கமாக தெறிக்க விடும் வசனங்களால் தூள் கிளப்பி இருப்பார். ஆக்ஷன் காட்சி ஒன்றில் கலாபவன் மணியிடம் பேசும் வசனம் ஒன்றில் பத்து நிமிஷத்துல வந்துட்டேன்... கேக்கவே கடுப்பா இருக்குல்ல என ஒரு காட்சி இடம் பெற்று இருக்கும். அது பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. வேல் படம் வெளியான போது உண்மையிலேயே இது சாத்தியமா என ஒரு சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. அந்த அளவுக்கு சூர்யா அவரின் கரடுமுரடான தெறிக்க விடும் நடிப்பால் அசத்தி இருப்பார். அவரின் எனர்ஜி வேற லெவலில் இருக்கும். இந்த காட்சி குறித்து இயக்குநர் ஹரி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது விளக்கம் கொடுத்து இருந்தார்.
'வேல்' படத்தில் சூர்யா அந்த வசனம் பேச உண்மையான அர்த்தம் என்னவென்றால் சென்னையில இருந்து பத்து நிமிஷத்துல வந்துட்டேன்னு சொன்னா உனக்கு எவ்வளவு கடுப்பா இருக்கு. அதுக்கே உனக்கு இவ்வளவு கடுப்பா இருந்தா நீ பண்றதை எல்லாம் பார்க்க எங்களுக்கு எவ்வளவு கடுப்பா இருக்கும் என்பதை புரிய வைப்பதற்காக தான் அப்படி பேசி இருப்பாரே தவிர உண்மையிலேயே பத்து நிமிஷத்துல வந்தேன் என சொல்லி இருக்க மாட்டார். ஜீப்பை விட்டு வேகவேகமாக இறங்கி பரபரப்பாக அவர் பேசியது உண்மையிலேயே அப்படி நடந்து இருக்குமோ என வியக்க வைக்கும் அளவுக்கு பர்ஃபார்மன்ஸ் கொடுத்து இருந்தார் என கூறினார் இயக்குநர் ஹரி.