தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 


ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் - நடிகர் 


மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநரானவர் கௌதம் வாசுதேவ் மேனன். அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு என ஏகப்பட்ட படங்களை எடுத்து முன்னணி இயக்குநராக மாறினார். 


மணிரத்னம் படங்களைத் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் கௌதம் படங்களில் தான் காதல் காட்சிகளை மிகவும் விரும்பி பார்த்தார்கள். இப்படியெல்லாம் கூட  நம்ம வாழ்க்கையில் நடக்குமா என எண்ண வைக்கும் அளவுக்கு அந்த காட்சிகளை அழகாக செதுக்கியிருப்பார்.இப்படியான கௌதம் அவ்வப்போது தன்னுடைய படங்களில் சில காட்சிகளில் நடிப்பார். 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கோலி சோடா 2’ படம் மூலம் நடிகராக மாறினார்.


அதன்பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ர தாண்டவம்,FIR, செல்ஃபி, சீதா ராமம், மைக்கேல், பத்து தல, விடுதல பாகம் 1 என ஏகப்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் ஆந்தாலஜி படங்களை இயக்கிய கௌதம், கமலை வைத்து 2006 ஆம் ஆண்டு இயக்கிய ‘வேட்டையாடு விளையாடு’ படம் சமீபத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.


இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் அவர் மீண்டும் முழு வீச்சில் படங்களை இயக்க வேண்டுமென ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 


கௌதம் மேனன் போட்ட பதிவு 


இதனிடையே கௌதம், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘முத்தப்பிச்சை’ என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதற்கான அர்த்தம் என்ன என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியாகவுள்ளது. அதன் பாடலின் அப்டேட்டாக இருக்கலாம் என ரசிகர்கள் கணித்துள்ளனர். 


துருவ நட்சத்திரம்


கடந்த 2016 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் உருவாவ உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த படம் நிதி பற்றாக்குறையால் ஆண்டுக்கணக்காக வெளியாகாமல் முடங்கி கிடக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர், ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என கூறப்படுவதால், கௌதம் மேனனின் பதிவு அப்படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.