துருவ நட்சத்திரம்


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள  திரைப்படம் துருவ நட்சத்திரம். முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில், அவர் விலகிய பின் விக்ரம் இப்படத்தில் நடிக்க முடிவானது.


மேலும் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரித்விராஜ் சுகுமாறன், திவ்யதர்ஷினி, பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடைபட்டது.


7 ஆண்டுகளுக்குப் பின் ரிலீஸ்


இந்த ஆண்டின் தொடக்கம் முதலே துருவ நட்சத்திரம் படம் குறித்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. படத்துக்கான பின்னணி இசையை ஹாரிஸ் ஜெயராஜ் தொடங்கியதாகத் தகவல்கள் பகிரப்பட்டன. பின் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு. இயக்குநர் கெளதம் மேனனின் விடாமுயற்சியால் ஒருவழியாக வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி துருவ நட்சத்திரம் வெளியாக இருக்கிறது.


சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படத்தின் டீசர், ஒரு மனம் பாடல் மற்றும் சமீபத்தில் வெளியான ஹிஸ் நேம் இஸ் ஜான் என்கிற பாடலைத் தவிர்த்து துருவ நடசத்திரம் படம் குறித்து  ரசிகர்களுக்கு பெரிய அளவிலான எந்த ஐடியாவும் கிடையாது. இப்படியான நிலையில் தற்போது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பல்வேறு ஆச்சரியமளிக்கும் தகவல்களை வழங்கியுள்ளார் கௌதம் மேனன்.


கெளதம் சினிமேட்டில் யுனிவர்ஸ்






நடிகர் விக்ரம்  தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங் வேலைகளை முழுவதுமாக முடித்துவிட்டு படத்தை முழுவதுமாக பார்த்தும் இருக்கிறார். அவருக்கு படம் பிடித்திருந்ததாகவும் கெளதம் மேனன் கூறியுள்ளார். இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் ஓபன் எண்டிங்காக இருக்கும் என்றும், துருவ நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து தான் ஒரு சினிமேட்டில் யுனிவர்ஸை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  துருவ நட்சத்திரம் படம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே தான் இந்த முயற்சியில் இறங்குவதா, வேண்டாமா என்று முடிவு செய்யப் போவதாக கெளதம் மேனன் தெவித்திருக்கிறார்.


வர்மன்


ஜெயிலர் திரைப்படத்தில் வர்மனாக நடித்த நடிகர் விநாயகன் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தில் மிகக் கொடூரமான வில்லனாக அவர் நடித்திருக்கிறார் என்று கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். ஜிவிஎம் தந்த இந்த அப்டேட்களால் விக்ரம் ரசிகர்கர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


தங்கலான்


பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்திற்கான போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள்  நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு பொங்கலன்று தங்கலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.