கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் காலை, மாலை என இருவேளை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.



கடந்த 11ஆம் தேதி  கல்லூரி முடிந்து மாணவ, மாணவிகள் கல்லூரியில் இருந்து கடலூர் பேருந்து நிலையத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்று உள்ளனர். அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்ததால், நாய் மீது ஏற்றாமல் இருக்க ஆட்டோவை வளைத்த போது ஆட்டோ எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுனர் லோகநாதன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 10 பேர் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த ஆட்டோவில் பயணம் செய்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மனக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த  மூன்றாமாண்டு மாணவன் தமிழ்ச்செல்வன் என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மாணவன் தமிழ்ச்செல்வன் உயிரிழப்புக்கு அரசு இழப்பீடு இரண்டு லட்ச ரூபாய் தொகையை அறிவித்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மீண்டும் தொடங்கியது.



 

கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் உயிரிழந்த மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை பத்தாது எனவும் கூடுதல் இழப்பீடு கேட்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திடீரென மாணவர்கள் கடற்கரைச் சாலையில் இருந்து நடை பயணம் மேற்கொள்ள தொடங்கினர். அவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்திய நிலையில் காவல்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது இந்த வழித்தடத்தில் பேருந்துகள் சரி வர இயக்கப்படாதால்தான் மாணவ, மாணவிகள் ஆட்டோவில் சென்று விபத்தில் சிக்குவதாகவும், கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை வைத்தனர். கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவ, மாணவிகள் காவல்துறையின் எதிர்ப்பையும் மீறி நடை பயணமாக வந்து சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.