சியான் விக்ரம் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம். நீண்ட நாள் காத்திருப்பு மற்றும் பல்வேறு தடைகளை பிறகு இந்த படம் வருகின்ற நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருக்கிறது. 


’துருவ நட்சத்திரம்’ படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜான் என்ற ரகசிய புலனாய்வு ஏஜெண்டாக விக்ரம் நடித்துள்ளார். ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், சரத்குமார், ராதிகா சரத்குமார், திவ்ய தர்ஷினி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே துருவ நட்சத்திரத்தில் விக்ரமுடன் நடித்துள்ளனர்.  


மேலும், ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்திய நடிகர் விநாயக் வில்லன் வேடத்தில் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 


துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பணப் பிரச்சனை, கால் ஷூட் பிரச்சனை என பல்வேறு காரணங்களால் கடந்த 2018ம் ஆண்டு முதல் படத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக படம் வெளியாவதில் தாமதமானது. 


இந்த படத்திற்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம், பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படங்களில் நடித்து முடித்துவிட்டார். 


இந்தநிலையில், கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ட்விட்டர்வாசியான  கீர்த்தி வெங்கடேசன் என்ற பயனர் இயக்குநர் கௌதம்வாசுதேவ் மேனனிடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். அதில், “ நான் துருவ நட்சத்திரம் அறிவிக்கப்பட்டபோது நான் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். இப்போது நான் 3 வருட அனுபவத்துடன் MNC இல் வேலை செய்கிறேன். உங்கள் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது கௌதம் சார்..? “ என்று பதிவிட்டு இருந்தார். 






அதற்கு சுவாரஸ்யமாக பதிலளித்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “ இத்தனை வருடத்தில் நிறைய கற்றுக்கொண்டேன், நான் 3 படங்கள், 4 ஆந்தாலஜி குறும்படங்கள், 5 மியூசிக் வீடியோக்களை இயக்கி வெளியிட்டிருக்கிறேன், மேலும் 6வது அறிவை வளர்த்துக் கொண்டேன்.” என தெரிவித்தார்.






அதன்பிறகு மற்றொரு பயனர் ஒருவர், “ துருவ நட்சத்திரம் ட்ரைலர் 'நேரத்தின்-சோதனையைத் தாங்கி' நிற்கிறது. இதுதான் உன்னதமான எடுத்துக்காட்டு! திடகாத்திரமாகத் தெரிகிறார் சியான் விக்ரம் ஒரு சூப்பர் டாப்பர் ஜிவிஎம்.” என பதிவிட்டிருந்தார். அதற்கு கௌதம் வாசுதேவ் மேனன், “நன்றி ஹலிதா, உங்கள் கருத்து மிகவும் பாராட்டுக்குறியதாக இருக்கிறது. உங்கள் படத்தையும் எதிர்பார்க்கிறேன்!” என தெரிவித்திருந்தார்.