என்னை நோக்கி பாயும் தோட்டா
இளம் தலைமுறையினரால் அதிகம் கொண்டாடப்பட்ட இயக்குநர்களில் ஒருவர் கெளதம் மேனன் , மின்னலே தொடங்கி காக்க காக்க , வேட்டையாடு விளையாடு , வாரணம் ஆயிரம் , வின்னைத்தாண்டி வருவாயா என ரொமாண்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படங்களில் தனித்துவமான முத்திரை பதித்தார். இப்படியான நிலையில் கெளதம் மேனன் தனுஷ் கூட்டணியில் உருவான படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு தொடங்கியது படப்பிடிப்பு. ஆனால் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஏற்பட்ட பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. நீண்ட காத்திருப்புக்கு பின் திரையரங்கில் வெளியான இப்படம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
படப்பிடிப்பில் தனுஷ் தலையிட்டாரா ?
சமீபத்தில் இப்படத்தைப் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது என்னை நோக்கி படத்தை தான் இயக்கவில்லை என கூறினார். இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் தனுஷின் தலையீட்டால் எடுக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இது குறித்து தற்போது கெளதம் மேனன் வெளிப்படையாக பேசியுள்ளார்
" அந்த படத்தை நான் எடுக்கவில்லை என்று சொன்னது அந்த படத்தை எடுத்ததில் எனக்கு திருப்தி இல்லை என்பதை சொல்வதற்காக. வேறு ஒருத்தர் அந்த படத்தை தயாரித்து நான் அப்படி சொல்லியிருந்தால் தான் தப்பு. தனுஷூக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை இருந்தது. இருவருக்கும் இடையில் நான் மாட்டிக் கொண்டேன். இதனால் அந்த படத்தை நான் எடுத்து தயாரித்தேன். அதன் பிறகு தனுஷின் டேட்ஸ் கிடைக்கவில்லை அவர் வடசென்னை படத்தில் நடிக்க போய்விட்டார். பின் தனுஷ் வந்து 5 நாள் மட்டும் கொடுத்தார். 20 நாளில் எடுக்க வேண்டிய படத்தை 5 நாட்களில் எடுத்து முடித்தேன். என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் முதல் பாகம் மட்டும்தான் நான் எழுதியதை மாதிரி என்னால் எடுக்க முடிந்தது. இரண்டாம் பாதி நான் எடுக்க நினைத்தது எதுவுமே எடுக்கவில்லை" என கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.