நாயகன் படம் பார்த்ததில் இருந்து மணிரத்னமிடம் வேலை செய்ய வேண்டும் என்கிற ஆசை தனக்கு இருந்ததாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்


கெளதம் மேனன்


மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன். காக்க காக்க, விண்ணைத் தாண்டி வருவாயா , வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்து வந்த கெளதம் மேனன், தயாரிப்பாளர்களின் பொருளாதார நெருக்கடிகளை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகிறார். இதனால் அவரது படங்கள் சொன்ன தேதிகளை வெளியாவதில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன.


நீண்ட நாட்களுக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கி சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் இயக்கிய ஜோஸ்வா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் தனது சினிமா பயணம் தொடங்கிய காலம் முதல் பல்வேறு அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.


இரண்டு வருடமாக மணிரத்னம் அலுவலகத்தில் காத்திருந்தேன்


” எனக்கு 16 வயது இருக்கும்போது நான்  நாயகன் படத்தை பார்த்தேன். அப்போதிருந்தே எனக்கு மணிரத்னம் படங்களின் மேல் ஆர்வம் அதிகம் இருந்தது. அதனால் தான் நான அவரிடம் எப்படியாவது உதவி இயக்குநராக சேர்ந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு சினிமாவில் தான் ஆர்வம் இருக்கிறது என்று எனது பெற்றோர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டேன். அப்போது நான் இரண்டு இயக்குநர்களை தேர்வு செய்து வைத்திருந்தேன். மணிரத்னம் மற்றும் பாரதிராஜா.


மணிரத்னத்தின் அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகள் அவரை பார்ப்பதற்காக காத்திருந்தேன். ஆனால் அவருடன் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இன்றுவரை மணிரத்னம் சாரை என்னுடைய குருவாக தான் நான் பார்க்கிறேன். அவருடைய படத்தில் வேலை செய்ய முடியவில்லை என்றாலும் அவருடைய படங்களை தனியாக உட்கார்ந்து பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்றுவரை அவருடன் நேரடியாக பேசும்போது அவரிடம் எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது.” என்று மணிரத்னம் குறித்து கெளதம் மேனன் கூறியுள்ளார்.


மணிரத்னம்கிட்ட கேட்டு தான் மாதவன் நடிப்பாரு


தனது முதல் படமான மின்னலே படம் குறித்து பேசியபோது கெளதம் மேனன் இப்படி கூறினார் “ மின்சார கனவு படத்தில் வேலை செய்தபோது எனக்கு மாதவனின் அறிமுகம்  கிடைத்தது. என்னிடம் கதை ஏதாவது இருக்கிறதா? என்று மாதவன் கேட்டார். அப்போது நான் காக்க காக்க படத்திற்கான திரைக்கதையை எழுதிக் கொண்டிருந்தேன். மின்னலே படத்தின் ஐடியா ரொம்ப நாட்களாக என்னிடம் இருந்தது. மாதவனிடம் இந்த கதையை சொன்னேன். அவருக்கு கதைப் பிடித்திருந்தது.


அவர் இந்தப் படத்தில் நடிக்க வந்த பிறகு நிறைய மாற்றங்கள் கதையில் நடந்தன. அதே நேரத்தில் படத்திற்கு தயாரிப்பாளரையும் அவரே பேசி முடிவு செய்தார். அப்போது மாதவன் எந்த படத்தில் நடித்தாலும் மணிதரனம் சாரிடம் கேட்டுதான் அதில் நடிப்பார். அப்போது அவர் என்னவளே மற்றும் மின்னலே ஆகிய இரு படங்களில எதில் நடிப்பது என்று மணிரத்னமிடன் கேட்டார். மணிரத்னம் என்னவளே படத்தில் அவரை முதலில் நடிக்கச் சொன்னார். என்னவளே படம் தான் முதலில் தொடங்கியது ஆனால் இடையில் மாதவன் மின்னலே படத்திற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார்” 


இவ்வாறு அவர் பேசினார்.