துருவ நட்சத்திரம்


இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் நேற்று (நவம்பர் 24 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இந்நிலையில் 2 கோடி ரூபாய் வழங்கினால் மட்டுமே துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட முடியும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் இந்த பணத்தை திரட்டமுடியாத காரணத்தினால் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் இன்னும் சில நாட்கள் தள்ளிப்போகும் என இயக்குநர் கெளதம் மேனன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.


வைரலாகும் கெளதம் மேனன் நேர்காணல்


சமீபத்தில் பிரபல ஊடகவியலாளரான பரத்வாஜ் ரங்கன் அவர்களுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார் இயக்குநர் கெளதம் மேனன். இந்த நேர்காணலில் துருவ நட்சத்திரம் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் அவர் தெளிவாக விளக்கினார். தன்னுடையப் படத்திற்கு தயாரிப்பாளர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். பின் தன்னுடைய சொந்த செலவில் இந்தப் படத்தை எடுத்துமுடிக்க திட்டமிட்டதாகவும் இடைப்பட்ட காலத்தில் தான் நடித்தப் படங்களின் மூலமாக வந்த தொகையை இந்த படத்திற்கே செலவிட்டதாகவும் அவர் கூறினார்.


படப்பிடிப்புத் தொடங்கி கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாவதால் இந்தப் படத்தின் கதை பழசாகிவிட்டது என்கிற அபிப்பிராயம் விநியோகஸ்தர்களிடம் உருவாகி இருப்பதாகவும் இதனால் படத்தை வாங்க அனைவரும் முன்வரத் தயங்குவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஓடிடி தளங்களில் ஒரு படத்தை வெளியிடுவதற்கு இருக்கும் பிரச்சனைகள் குறித்து அவர் பேசியிருந்தார். இந்த நேர்காணல் பல்வேறு தரப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்தப் படத்திற்கான தங்களது ஆதரவையும் ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். 


5 ஆயிரம் கொடுக்க முன்வந்த ரசிகர்



தற்போது ரசிகர் ஒருவர் இந்த நேர்காணலை எடுத்த பரத்வாஜ் ரங்கன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் . இந்தக் கடிதத்தில் தான் ஒரு மிகப்பெரிய கெளதம் மேனன் ரசிகர் என்றும் அவருக்கு தான் ஏதாவது ஒரு வகையில் உதவ நினைப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இந்த பிரச்சனையில் அவருக்கு உதவும் வகையில் தன்னிடம் இருக்கும் 5 ஆயிரம் ரூவாய் பணத்தை தான் கெளதம் மேனனுக்கு வழங்க ஆசைப்படுவதாகவும். எப்படியாவது அவரிடம் இந்த பணத்தை கொண்டு சேர்க்க தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கடிதம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  தன் மனதிற்கு நெருக்கமான ஒரு படைப்பாளிக்கு ஒரு ரசிகர் உதவ  நினைக்கும் இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைக்கும்படி உள்ளது.