துருவ நட்சத்திரம்
கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். விக்ரம் , ரிது வர்மா, விநாயகன், ஆர் பார்த்திபன், ராதிகா, டி டி நீலகண்டன், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் ஹெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ஏன் இந்த தாமதம்?
துருவ நட்சத்திரம் படம் இவ்வளவு தாமதம் ஆனதற்கு பல்வேறு காரணங்களை வெளிப்படையாக பேசியுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். முதலில் தன்னுடைய படத்திற்கான பணத்தை தயாரிப்பாளர் இரண்டு ஃபினான்சியர்களிடம் இருந்து பெற்றதாகவும் இந்த இரண்டு நபர்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக இந்தப் படத்தை நிறுத்தச் சொல்லி வழக்கு பதிவு செய்யப்பட்டதே முக்கிய காரணம் என்று அவர் கூறியிருக்கிறார். எப்படியாவது இந்தப் படத்தை முடிக்க வேண்டும் என்று தன்னைத் தவிர தயாரிப்பாளர்கள் உட்பட யாரும் தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்பதே தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றம் என்று கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கடும் முயற்சிகளுக்குப் பின்
ஒரு கட்டத்திற்குப் பின் இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து தன்னுடைய படத்தை தானே தயாரிக்க முன்வந்துள்ளார் கெளதம் மேனன். இரு தரப்பிலும் பேசி படத்தின் மீதான வழக்கை வாபஸ் பெறவைத்து அடுத்தபடியாக பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் வந்த பணத்தை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை தயாரித்துள்ளார் கெளதம் மேனன். இந்த சிக்கல்கள் காரணமாக துருவ நட்சத்திரம் படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்க இன்னும் எந்த நிறுவனமும் முன் வரவில்லை அதற்கான வேலைகளில்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார் கெளதம் மேனன்.
சூர்யா ஏன் இந்தப் படத்தை நிராகரித்தார்?
துருவ நட்சத்திரம் படத்தின் கதையை தான் முதலில் சூர்யாவிடம் சொன்னதாகவும் சூர்யா இந்தப் படத்தின் கதையை நிராகரித்ததையும் நாம் அறிந்தது தகவல்தான். சூர்யா இந்தப் படத்தை ஏன் நிராகரித்தார் என்கிற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதுகுறித்து கெளதம் மேனன் பேசியபோது “சூர்யாவிடம் நான் இந்தப் படத்தின் கதையை சொன்னேன். அப்போது சூர்யா தன்னால் இந்தப் படத்தை தொடர்புபடுத்தி பார்க்கவில்லை என்றும் இதே மாதிரியான வேறு படங்கள் வெளிவந்திருந்தால் அதை தனக்கு ரெஃபரன்ஸாக காட்டும்படியும் கேட்டார். அப்போது அவரிடம் காட்டுவதற்கு என்னிடம் எந்த ரெஃபரன்ஸும் இல்லை. சூர்யா ஏன் என்னை நம்பாமல் அப்படி கேட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவரிடம் வாரணம் ஆயிரம் படத்தின் கதையை சொன்னபோது எந்த நம்பிக்கையில் இருந்தேனோ அதே நம்பிக்கை எனக்கு இந்தப் படத்திற்கும் இருந்தது.
சூர்யா மாதிரியான ஒரு நடிகர் இந்தப் படத்தில் நடித்தால் இந்த கதையை என்னால் பார்வையாளர்கள் நம்பும் வகையில் எடுக்க முடிந்திருக்கும். அதற்கு அவர் என்னை நம்பினால் போதும். என்னுடைய எல்லாப் படங்களையும் நான் அதே நம்பிக்கையில்தான் எடுத்திருக்கிறேன் . நான் எழுதியதைத் தாண்டி படப்பிடிப்பில் எங்களை மீறிய ஒன்றை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம் அதே மாதிரிதான் தான் நான் இந்தக் கதையையும் பார்த்தேன். ஆனால் இந்தக் கதையில் எனக்கு இருந்த நம்பிக்கை சூர்யாவுக்கு இல்லை.’ என்று அவர் கூறியிருக்கிறார்.