நடிகர் விக்ரம் நடித்துள்ள “துருவ நட்சத்திரம்” படம் இன்று வெளியாகாத நிலையில், அப்படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 


தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். இளைஞர்களை கவரும் வகையில் காதல் மற்றும் ஆக்‌ஷன் படங்களை இயக்கி வெற்றி கண்ட இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு “துருவ நட்சத்திரம்” என்ற படத்தை தொடங்கினார். இந்த கதையில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் அவர் விலகினார். இதனையடுத்து நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்க கொஞ்சம் கொஞ்சமாக துருவ நட்சத்திரம் படம் வளரத் தொடங்கியது. 


இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படமானது  ஸ்பை திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர்  கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. ஹாலிவுட் தரத்தில் அமைந்த அதன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், “ஒரு மனம்” பாடலும் கொரோனாவுக்கு முன் வெளியாகியிருந்தது. 


அதன்பின்னர் எந்த வித அப்டேட்டும் இல்லாத நிலையில் கௌதம் மேனன் நடிப்பு பக்கம் வண்டியை திருப்பினார். முன்னணி நடிகர்கள் படங்கள் என்றில்லாமல் கிடைக்கும் படங்களில் எல்லாம் தன் நடிப்பு திறமையை காட்டினார். இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட் எல்லாம் வெளிவர தொடங்கியது. படமும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 






இதனால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்படத்தால் நிறைய பொருளாதார பிரச்சினைகளை சந்தித்த கௌதம் அதன்பின்னரே நடிக்கச் சென்றார். தற்போது அந்த சிக்கல் தீர்ந்து விட்டதால் இனிமேல் இயக்கத்தில் கவனம் செலுத்தப்போவதாகவும் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் துருவ நட்சத்திரம் படத்துக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டது. ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு டிக்கெட் முன்பதிவு தொடங்காததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். 


ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய இன்று காலை 10.30 மணிக்குள் சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் போட்டு பெற்ற ரூ.2.40 கோடியை கௌதம் மேனன் திரும்ப கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. இதனால் திட்டமிட்டபடி துருவ நட்சத்திரம் படம் இன்று வெளியாகவில்லை.


இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குநர் கௌதம் மேனன், “மன்னிக்கவும். துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரவில்லை. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் இன்னும் ஓரிரு நாட்கள் தேவை என்று தெரிகிறது. உலகெங்கிலும் உள்ள எல்லா இடங்களிலும் முன்பதிவுகள் மற்றும் சரியான தியேட்டர்கள் மூலம் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை அளிப்போம் என நம்புகிறோம். படத்துக்கான ஆதரவு மனதைக் கவரும் வகையில் இருக்கிறது, மேலும் எங்களைத் தொடர வைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் வருவோம்” என தெரிவித்துள்ளார்.