அதிகம் சம்பளம் கேட்பதாக சொன்ன தயாரிப்பாளரை நடிகர் மாதவன் சரியான நேரத்தில் பதிலடி கொடுத்த நிகழ்வை இயக்குநர் ஜி.மாரிமுத்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என கொண்டாடப்பட்டவர் நடிகர் மாதவன். அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமான அவர் மின்னலே, லேசா லேசா, பிரியாமான தோழி, டும் டும் டும், ரன், அன்பே சிவம், ஆய்த எழுத்து, ஜே ஜே, தம்பி, யாவரும் நலம், மன்மதன் அம்பு, வேட்டை, இறுதிச்சுற்று, ராக்கெட்ரி தி நம்பி விளைவு ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மாதவன் நடித்துள்ளார்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் கண்ணும் கண்ணும், புலிவால் படங்களை இயக்கிய இயக்குநர் ஜி.மாரிமுத்து, மாதவன் பற்றி சில தகவல்களை தெரிவித்துள்ளார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நடிகர் ராஜ்கிரண், மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
அந்த நேர்காணலில், “மாதவன் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பிறகு இரண்டாவதாக என்னவளே படத்தில் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு கம்பெனியில் கதை கேட்டு ஓகே சொல்லி விட்டார். அதற்கு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக கேட்டார். ஆனால் தயாரிப்பாளரோ என்ன சார், போன படம் சரியாக போகவில்லையே.
அப்புறம் எப்படி இவ்வளவு சம்பளம் ஏன் கொடுக்கணும் என கேட்டார். உடனே மாதவன், நான் நல்லா அழகா இருக்கேன், நடிக்கிறேன் என நினைச்சுதான் சம்பளம் கொடுக்குறீங்கன்னு நினைச்சேன். போன படம்தான் என் சம்பளத்தை முடிவு பண்ணுதா என கேட்டுவிட்டு அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இதன் பின்னர் ரன் படம் மெஹா ஹிட்டாக, மீண்டும் அதே தயாரிப்பாளர் மாதவனை தேடி வந்தார்.
இம்முறை மாதவன் தயாரிப்பாளருக்கு மாரடைப்பு வரும் அளவுக்கு சம்பளம் ஒன்றை கேட்டார். நீங்க சொன்னீங்களே முந்தைய படம் எப்படி இருக்கோ அப்பதான் சம்பளம் முடிவு பண்ண முடியும்னு.. இப்பதான் ரன் படம் ஹிட் ஆயிடுச்சே என நோஸ்கட் செய்தார்” என இயக்குநர் ஜி.மாரிமுத்து அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.