மலையாள திரையுலகின் பிரபலமான இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என பன்முக திறமையாளராக இருப்பவர் இயக்குநர் ஃபாசில். 1980ம் ஆண்டு வெளியான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமான ஃபாசில் தமிழ் மற்றும் தெலுங்கில் சில சூப்பர் ஹிட் படங்களை இயக்கி அவரின் பெயரை நிலைநாட்டினார். 



மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பல திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு அமோகமான வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் உணர்ச்சிகரமான திரைக்கதையில் சென்டிமெண்டையும் காமெடியையும் சரியான விகிதத்தில் கலந்து ஒரு அற்புதமான படைப்பை வழங்குவதில் திறமையானவர் இயக்குநர் ஃபாசில். அந்த வகையில் இன்று 71வது பிறந்தநாள் கொண்டாடும் ஃபாசில் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் ஒரு பார்வை. 


அரங்கேற்ற வேளை :


சிவராமகிருஷ்ணன், மாஷா, நம்பி அண்ணன் இந்த பெயர்களை இன்று வரை மறக்க முடியாத அளவிற்கு நாஸ்டால்ஜிக் மொமெண்ட்களை கண்முன்னே நிறுத்தும் ஒரு திரைப்படம் 'அரங்கேற்ற வேளை'. ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ என்கிற மலையாளப் படத்தின் ரீமேக்தான் 'அரங்கேற்ற வேளை'.  தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அழகாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் இப்படத்தை இயக்கி இருந்தார். பிரபு, ரேவதி, வி.கே. ராமசாமி நடிப்பில் ஒரு இயல்பான ஃபீல் குட் நகைச்சுவை திரைப்படமாக இப்படம் அமைந்து இருந்தது. இளையராஜாவின் இசையில் இன்று வரையில்  பாடல்கள் அனைத்தும் தெவிட்டாத ரம்மியமான ரகம்.  


 



பூவிழி வாசலிலே: 


 
'பூவினு புதிய பூந்தென்னல்' என்ற மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் சத்யராஜ், சுஜிதா, ரகுவரன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் தலைமுறைகளை கடந்து இன்றும் ரசிக்கப்படும் ஒரு படமாக விளங்குகிறது. சத்யராஜ் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்த இப்படம் வெற்றி விழா கண்ட ஒரு திரைப்படம். 


பூவே பூச்சூடவா: 


நதியா, பத்மினி, ஜெய் ஷங்கர், எஸ்.வி. சேகர் நடிப்பில் 1985ம் ஆண்டு   வெளியான 'பூவே பூச்சூடவா' படம் பெரிதும் கவர்ந்த ஒரு படம். கமர்ஷியல் படத்திற்கு தேவையான எந்த ஒரு மசாலாவும் இல்லாமல் பாட்டி - பேத்தி இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு திரைக்கதையை அமைத்து இருந்தார். இது மலையாளத்தில் 1984ம் ஆண்டு வெளியான 'நோக்கத்தாதுாரத்து கண்ணும் நட்டு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமாகும். 



 


என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு: 


ஒரு மிகைப்படுத்தப்படாத எமோஷனல் திரைக்கதை கொண்ட ஒரு படம் 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு'. சத்யராஜ், சுஹாசினி, ரேகா, ரகுவரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தின் உருக்கமான க்ளைமாக்ஸ் பார்வையாளர்களை கண்ணீரில் மிதக்க வைத்தது. இந்த எவர்கிரீன் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 


காதலுக்கு மரியாதை: 


மசாலா கலந்த கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த விஜய்க்கு ஒரு ஹீரோ அந்தஸ்தை அஸ்திவாரம் போட்ட ஒரு திரைப்படம் என்றால் அது காதலுக்கு மரியாதை திரைப்படம்தான் முதல் படி. மலையாளத்தில் ’அனியத்திப்ராவு’ என்ற பெயரில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக். மனம் கவர்ந்த குழந்தை நட்சத்திரமாக இருந்த பேபி ஷாலினி ஒரு ஹீரோயினாக அறிமுகமான படம்.   


இரட்டை அர்த்தங்கள், ஆபாசம் எதுவும் இன்றி ஒரு கண்ணியமான காதல் கதையை கொடுத்து காதலுக்கு மரியாதை செய்து இருந்தார் இயக்குநர் ஃபாசில். 


இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் தமிழில் வெளியான இந்த ஐந்து படைப்புகளுக்கும் ஒரு ஒற்றுமை என்றால் அது இளையராஜாவின் இதமான இசை. கண்ணியமான உணர்வுபூர்வமான திரைக்கதை, அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடிப்பு, இளையராஜாவின் மென்மையான இசை என இவை அனைத்தும் தான் இயக்குநர் ஃபாசில் திரைப்படங்களை காலங்கள் கடந்தும் நிலைக்க வைத்துள்ளன.