நிச்சயமாக கம்பேக் கொடுப்பேன் என்று கடந்த ஆண்டு நடிகர் ஷாம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவரது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


ஷாம்


12 பி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, அன்பே அன்பே, லேசா லேசா, கிரிவலம், இயற்கை ஏ.பி,சி,டி , தில்லாலங்கடி, மனதோடு மழைக்காலம், அகம் புறம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவின் சாக்லெட் பாய்களில் ஒருவராக இருந்த ஷாமுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வந்தன.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாம் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 6 மெழுகுவர்த்திகள் படம் அவருக்கு நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்காக உடல் எடையைக் குறைத்து கடின உழைப்பை செலுத்தி தனது நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு விஜய் நடித்து வெளியான வாரிசு படத்தில் ஷாம் நடித்திருந்தார்.


நிச்சயமாக கம்பேக் கொடுப்பேன்


பட வாய்ப்புகள் குறைந்தது குறித்து நடிகர் ஷாம் கடந்த ஆண்டு ஒரு நேர்க்காணல் ஒன்றில் இப்படி கூறியிருந்தார். “நான் தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டுதான் இருந்தேன், என்ன நடந்தது என்று தெரியவில்லை ஆனால் நிச்சயமாக  கம்பேக் கொடுப்பேன். என்னுடைய சொந்த தயாரிப்பின் கீழ் அடுத்தடுத்து நிறையப் படங்களை வெளியிட இருக்கிறேன்“ என்று அவர் கூறினார்.


மேலும் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் ஷாம் நடித்த இயற்கை படத்தின் இரண்டாம் பாகம் குறித்தும் அவர் தெரிவித்தார். ‘ ஜனா சார் இப்போது இல்லை. இயற்கை படத்தின் இரண்டாம் பாகத்தின் சூப்பரான ஒரு கதையை அவர் எனக்காக வைத்திருந்தார். அவரது உதவி இயக்குநர்கள் இப்போது இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் இந்தப் படத்தை இயக்குவார்கள் என்று நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.


அஸ்திரம்






 நிச்சயம் தான் கம்பேக் கொடுப்பேன் என்று ஷாம் கடந்த ஆண்டு சொன்ன நிலையில், தற்போது அவரது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு அஸ்திரம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரவிந்த் ராஜகோபால் இந்தப் படத்தை இயக்குகிறார்.


கே.எஸ் சுந்தர மூர்த்தி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இப்படம் குறித்தான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.