தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான சேரனின் (Director Cheran) தந்தை எஸ். பாண்டியன் இன்று (நவ.16) காலமானார். அவருக்கு வயது 84.


சேரனின் தந்தை


தான் இயக்கிய படங்களுக்காக மூன்று தேசிய விருதுகள் வென்றும், பல வெற்றிப் படங்களைக் கொடுத்தும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் இயக்குநர் சேரன். இவரது தந்தை எஸ்.பாண்டியன் இன்று காலை 6.30 மணியளவில் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள அவரது சொந்த ஊரான பழையூர்பட்டியில் உயிரிழந்தார்.


சேரனின் தந்தை எஸ். பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்தவர். கடந்த சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 




பாண்டியனின் இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் பழையூர்பட்டியில் உள்ள அவர்களது வீட்டில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேரன் குடும்பத்தினருக்கு பல்வேறு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 


சேரனின் திரைப்பயணம்


இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பட்டறையில் தொடங்கி, 1997ஆம் ஆண்டு ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் கால் பதித்த சேரன், பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு என தன் அடுத்தடுத்த படங்களின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து கோலிவுட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்தார்.


தான் இயக்கிய வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளை வென்றுள்ளார் சேரன். மேலும் தமிழ்நாடு மாநில அரசின் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள சேரன், ஒரு நடிகராகவும் உருவெடுத்து தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தார். 


இறுதியாக 2019ஆம் ஆண்டு திருமணம் எனும் படத்தை இயக்கியிருந்த சேரன், இந்த ஆண்டு வெளியான தமிழ் குடிமகன் படத்தில் நடித்திருந்தார்.


தன் தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு சமர்ப்பிக்கும் வகையில், குழந்தைகளுக்காக அயராது பாடுபடும் தந்தைகளின் வலியைக் கடத்தும் வகையில் சேரன் 2005ஆம் ஆண்டு இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படம் இன்றும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.