பிரபல எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி இயக்குநராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். அவரது முதல் திரைப்பட டைட்டிலே ‘வடக்கன்’. சர்ச்சைக்குரிய ஒரு டைட்டில்தான் இது. நேற்று இயக்குநர் லிங்குசாமி இந்த படத்தின் டீசரை வெளியிட்டார்.  டீசரில் வரும் காட்சிகளும் வசனங்களும் பரபரப்பை பற்ற வைக்க, என்னதான் சொல்ல வருகிறார் பாஸ்கர் சக்தி என்பதை கேட்க அவரையே தொடர்புகொண்டோம்.



இயக்குநர் பாஸ்கர் சக்தி


’வீரியமான வசனங்களுடன் வெளிவந்த டீசர்’


ஏனென்றால், அந்த டீசரில் வரும் வசனங்கள் அவ்வளவு வீரியமாக இருக்கின்றன. அந்த வீரியம் அப்படியே தமிழர்கள் மனதில் பதிவானால், அது ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் யாரும் நினைத்து பார்க்க முடியாததாக இருந்துவிடும். ’எங்க பாத்தாலும் வடக்கன்ங்க வேலைக்கு வந்துட்டானுக டா’ பூரா வடக்கனுகளையும் அடிச்சு பத்தனும்டா’ என்பது போன்ற வரிகள், தமிழர்களை உடனடியாக வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பும் கத்தியாக மாறிவிடக் கூடாதே என்ற எண்ணம் நமக்கு எழுந்தது. ஏற்கனவே, வட மாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் பெருவாரியாக இருக்கிறது என்ற எண்ணமும், தமிழர்கள் வேலை வாய்ப்பை அவர்கள் கொத்துக்கறி போடுகிறார்கள் என்ற குமுறலும் ஏராளமானோருக்கு இங்கு இருக்கிறது. அதே நேரத்தில், தமிழர் உரிமைகளை பேசும் கட்சிகளும் கூட வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான கருத்துகளை அவ்வப்போது உதிர்த்து வருகின்றன.



’வட மாநில தொழிலாளர்கள் பிரச்னையை சந்தித்த தமிழ்நாடு’


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட, தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடக்கிறது, கொத்து கொத்தாக அவர்கள் தமிழ்நாட்டில் கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற பரவிய வதந்’தீ’, வட மாநிலங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மாநில முதல்வர்களே இந்த விவகாரத்தில் தலையிட்டு உண்மையை அறிய தமிழ்நாட்டிற்கே அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அனுப்பி வைத்த காட்சிகளை எல்லாம் நாம் கண்கூடாக பார்த்தோம். அப்போது தமிழ்நாடே தகித்துக்கொண்டிருந்தது. தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் பிரச்னை எதுவும் இங்கு வெடிக்காமல் தவிர்க்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக பல பகுதிகளுக்கு சென்று வட மாநில தொழிலாளர்களை நலம் விசாரித்தார் என்பது எல்லாம் நாம் அறிந்த விஷயங்கள்தான்.


இயக்குநர் பாஸ்கர் சக்தி சொல்வது என்ன ?


அப்படியிருக்கும்போது, ‘வடக்கன்களை அடித்து துரத்தனும்’ என்பது மாதிரியான வசனங்கள் தமிழ் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாதா என்பதை பாஸ்கர் சக்தியிடமே கேட்டோம்.



இயக்குநர் பாஸ்கர் சக்தி


எந்த பதற்றமும் இன்றி பதிலளிக்கத் தொடங்கினார். ‘இப்ப நீங்க கேட்குறீங்கள்ல, இந்த டீசர் இப்படி ஒரு தாக்கத்த ஏற்படுத்ததா என்று, இந்த விவகாரம் சமூகத்தில் ஏற்படுத்திய பலவிதமான தாக்கங்களே இந்த படம் உருவாக காரணம். பலரும் இந்த பிரச்னையை தொட்டு எழுத யோசித்தப்போது, தைரியமாக நான் இதனை ஒரு படமாகவே உருவாக்கியிருக்கிறேன்.


இந்த டீசரில் வரும் வசனங்களை வைத்தே இதுதான் கதை, இது தான் திரைப்படம் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் இந்த டீசரை வைத்து 100 விசயங்களை யோசித்தால், நான் 101வது விஷயத்தை வைத்து இந்த படத்தை எடுத்திருப்பேன். அது படம் பார்க்கும்போது தெரியும்.


வடமாநில தொழிலாளர்களால் என்ன மாதிரியான தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது என்பதைதான் நான் சொல்லியிருக்கிறேன். அதை எப்படி, எந்த விதத்தில் சொல்லியிருக்கிறேன் என்பது திரைப்படம் வெளியாகும்போதும் உங்களுக்கே தெரியும்’ என்றார் சாகவாசமாக.


வதந்தியை பரப்புவோர் மத்தியில் வாழ்கிறோம்தானே ?


ஒரு டீசரில் எதையும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது என்பது என்னவோ உண்மைதான் என்றாலும், சமூக வலைதளத்தில் பகிரப்படும் ஒரே ஒரு பதிவு எவ்வளவு பெரிய பிரச்னைகளை இப்போதெல்லாம் ஏற்படுத்துகிறது.  அது உண்மையா ? இல்லை பொய்யா ? என்பதை கூட ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு ஷேர் செய்யும் கூட்டம் நம் கண்முன் இருக்கும்போது, காண்டர்வர்ஷியான ஒரு கதையை தொட்டு, அதற்கு இப்படியான ஒரு டீசரையும் பாஸ்கர் சக்தி வெளியிட்டிருக்கிறார். அவர் சொல்வது மாதிரி படம் வேறு மாதிரி இருந்து சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும்,  படம் வரும் வரை இந்த டீசரும் அடுத்து வரும் ட்ரெய்லருமே மக்கள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும். அது எதிர்மறையான  எந்த தாக்கத்தை இந்த சமூகத்தில் ஏற்படுத்திவிடக் கூடாது.