இயக்குநர் அமீரை ஒரு பேட்டியின்போது தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ’இயக்குநர் சிகரம்’ பாரதிராஜா கடும் கண்டத்தை வெளியிட்டுள்ளார். 


கடந்த 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்க, நடிகர் கார்த்தி அறிமுகமாகி இருந்தார்.


பருத்திவீரனாக கார்த்தி, முத்தழகாக பிரியாமணி, கழுவத்தேவனாக பொன்வண்ணன், செவ்வாழையாக சரவணன், டக்ளஸ் ஆக கஞ்சா கருப்பு என சினிமா ரசிகர்களை எப்போது  கேட்டாலும் அந்தந்த கேரக்டரின் பெயர்களை சொல்வார்கள். அந்த அளவிற்கு அமீர் தனது இயக்கத்தில் ஒரு கதாபாத்திரத்தை செதுக்கி இருப்பார். இந்த படத்தின் போது பல பிரச்சினைகள் நடந்ததாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து இயக்குநர் அமீரும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் தங்களுடைய நேர்காணல்களில் அடுத்தடுத்து தெரிவித்தனர். குறிப்பாக ஞானவேல்ராஜா இயக்குநர் அமீரை திருடன் எனவும், வேலை தெரியாதவர், என் காசில் தொழிலை கற்றுக்கொண்டார் என தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


அந்த வகையில் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்காரா, பொன்வண்ணன், கவிஞர் சினேகன், இயக்குநர் கரு.பழனியப்ப என பலரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது ’இயக்குநர் சிகரம்’ பாரதிராஜாவும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். 


அதில், “வணக்கம்..


திரு.ஞானவேல் அவர்களே, உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதர பிரச்சனை சார்ந்தது மட்டுமே.. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும். உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி, மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் திரு.அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிடவேண்டாம்.


பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டுபடம் இயக்கி,அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என்போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்..! ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் அவரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள்.! நான் இப்போதும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்..! மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும்,அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார். 


ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு:


பருத்தி வீரன் ரிலீசாகி 16 ஆண்டுகள் கடந்த பின்பும், அதன் மீதான சர்ச்சை இன்று பூதகரமாக வெடித்துள்ளது. கார்த்தி முதன் முதலில் கதாநாயகனாக நடித்த பருத்தி வீரன் படத்தை இயக்குநர் அமீர் இயக்கி இருந்தார். படம் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார். இந்த நிலையில் பருத்திவீரன் படத்தால் தனக்கு ரூ.2 கோடி வரை கடன் ஏற்பட்டதாக அமீர் கூறியிருந்தார். அமீரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஞானவேல்ராஜா, பருத்திவீரனின் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ரூ.2.76 கோடியில் பட்ஜெட் என சொல்லி விட்டு ரூ.4 கோடி வரை அமீர் செலவு செய்து தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.