மனோஜ் பாரதிராஜா மறைவு

இயக்குநர் சிகரம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தாஜ்மகால் படத்தின் மூலம நடிகராக அறிமுகமான மனோஜூக்கு குறிப்பிட்டு சொல்லும்படி பெரிய வெற்றிப்படங்கள் அமையவில்லை. நடிப்பு , இயக்கம் என சினிமாவில் பல போராட்டங்களுக்கு மத்தியில் தன்னை தக்கவைத்துக் கொண்டு வந்தார் மனோஜ். ஈஸ்வரன் ,  மாநாடு , கொம்பன் போன்ற படங்களில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் நல்ல பாராட்டுக்களைப் பெற்று குணச்சித்திர நடிகராக வலம் வரத் தொடங்கினார். 

Continues below advertisement

பல போராட்டங்களுக்கு மத்தியில் நடந்த மனோஜின் திருமணம்

மனோஜின் இறப்பைத் தொடர்ந்து அவரைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மனோஜின் திருமணம் பற்றிய நினைவுகளை பலர் பகிர்ந்து வருகிறார்கள்.  மனோஜ் நடித்த சாதூரியன் படத்தில் அவருடன் இணைந்து நடித்தார் நந்தனா. படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்தபோதும் மனோஜ் தனது வீட்டில் காதலை தெரிவிக்கவில்லை. இது இப்படி போனால் செட் ஆகாது என நந்தனா தெரிவித்துள்ளார். மனோஜ் தன் வீட்டிலும் நந்தனா தனது வீட்டிலும் காதலை தெரிவித்துள்ளார்கள். 

மனோஜின் காதல் ஆரம்பத்தில் அவரது தந்தை பாரதிராஜாவுக்கு பிடிக்கவில்லை. நந்தனாவை தனக்கு பிடிக்கவில்லை என தனது மனைவியிடம் அவர் சொல்லி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதேபோல் நந்தனாவின் வீட்டிலும் மனோஜூடனான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். வெளி நாட்டில் இருந்து மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைப்பதாக நந்தனாவை கன்வின்ஸ் செய்திருக்கிறார்கள். மேலும் மலையாளியான நந்தனாவால் தமிழ் பேசும் குடும்பத்தில் சமாளிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்  ஆனால் என்ன ஆனாலும் தான் மனோஜை தான் திருமணம் செய்துகொள்வேன் என நந்தனான் உறுதியாக இருந்துள்ளார். பலவித பேச்சுவார்த்தைக்குப் பின் தான் இருவீட்டினரும் இந்த ஜோடியின் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்கள். பல போராட்டங்கள் கடந்து இருவருக்கும் 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

Continues below advertisement

மனோஜ் இறுதி ஊர்வலம்

மனோஜூக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை நல்லபடியாக முடிந்து மனோஜ் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயரிரிந்தார்.  தற்போது மனோஜின் உடல் நீலாங்கரையில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழ் திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மாலை 3 மணிக்கு அவரது உடல் பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.