தமிழ் சினிமாவில் மண் சார்ந்த திரைப்படங்களை இயக்கி, கிராமப்புறங்ளை மையப்படுத்தி நூற்றுக்கணக்கில் படங்கள் வருவதற்கு அச்சாரமாக இருப்பவர் பாரதிராஜா. இன்று தமிழ் திரையுலம் வேறொரு பரிணாமத்திற்கு சென்றுள்ள சூழலில், பார்ட் 2 படங்களுக்கும், சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


தமிழ் சினிமாவின் முதல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்:


இன்றைய 2கே கிட்ஸ் இளைஞர்களிடம் தமிழிலில் முதன் முதலில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படத்தை எடுத்தவர் யார்? என்று கேட்டால் லோகேஷ் கனகராஜ் என்று சொல்வார்கள். ஆனால், தமிழிலில் முதன் முதலில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படத்தை இயக்கியவர் பாரதிராஜா என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம்.


1977ம் ஆண்டு 16 வயதினிலே என்ற படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும், தமிழ்நாட்டையும் தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பாரதிராஜா. அதுவரை தமிழ் சினிமாவில் யாரும் காட்டிடாத இடத்தையும், பார்த்திடாத திரைக்கதையையும் அமைத்து கமல்ஹாசன் – ரஜினிகாந்த் இருவரையும் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பாரதிராஜா.


சப்பாணி - மயில் சேர்ந்தார்களா?


சப்பாணி மயில் மேல் கொண்ட காதலை மையப்படுத்தி எடுத்த இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சியில், மயிலுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சிக்கும் பரட்டையை தலையில் கல்லைப் போட்டு சப்பாணி கொலை செய்து விடுவார். இதனால், சப்பாணியை கொலை குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துவிடுவார்கள். சப்பாணியின் வருகைக்காக மயிலு காத்திருப்பது போல படத்தை பாரதிராஜா நிறைவு செய்திருப்பார். சப்பாணி மீண்டும் வந்துவிட்டானா? மயிலுவுடன் சப்பாணியின் காதல் சேர்ந்ததா? இருவரும் இணைந்து வாழ்ந்தார்களா? என்ற கேள்விக்கான பதிலை பாரதிராஜா ரசிகர்களாகிய நம்மிடமே விட்டிருப்பார்.


இன்று வரை பலருக்கும் இந்த கேள்விக்கு விடை கிடைக்காமலே இருந்திருக்கும். ஆனால், பாரதிராஜா 16 வயதினிலே படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நம்மிடமே விடையை தேர்வு செய்துகொள்ளச் சொல்லி அளித்த கேள்விக்கு தனது அடுத்த படத்திலே பதில் அளித்திருப்பார். பல விருதுகளையும், பல திருப்பங்களையும் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய 16 வயதினிலே படத்திற்கு பிறகு பாரதிராஜா இயக்கிய படம் கிழக்கே போகும் ரயில்.


எப்படி?


சுதாகர் நாயகனாகவும், ராதிகா நாயகியாகவும் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் ஒரு காட்சியில் திருமண வீடு ஒன்றிற்கு மொய் செய்யும் நிகழ்வு நடக்கும். அப்போது, ஒவ்வொருவரும் செய்த மொய் விவரத்தை மைக் மூலமாக ஒலிபெருக்கியில் கூறுவார்கள். அப்போது, நாயகன் சுதாகர் சைக்கிளில் வரும்போது, ஒலி பெருக்கியில் பெட்டிக்கடை மயிலு புருஷசன் சப்பாணி 5 ரூபாய் என்று மொய் பண விவரம் வரும்.


அதாவது, 16 வயதினிலே திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் நம் முன் நின்ற கேள்விக்கு பாரதிராஜா இந்த ஒரு வசனத்தில் பதில் அளித்திருப்பார். சிறைக்குச் சென்ற சப்பாணி விடுதலையாகி திரும்பி வந்துவிட்டதாகவும், திரும்பி வந்த சப்பாணிக்கும் மயிலுவிற்கும் திருமணம் நடைபெற்று விட்டதாகவும், இருவரும் இணைந்து பெட்டிக்கடை வைத்திருப்பதாகவும், வசதியாக வாழ்ந்து வரும் அவர்கள் ரூபாய் 5 மொய் செய்திருப்பதாகவும் அந்த ஒற்றை வசனத்தில் நமக்கு உணர்த்தியிருப்பார்.


இன்றைய காலத்தில் ரூபாய் 5 என்பது ஒரு சாதாரண காசாக இருந்தாலும், படம் வெளியான 1978ம் ஆண்டு அதாவது, 44 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 5 என்பது மிகப்பெரிய தொகை ஆகும். இதை உணர்த்தும் விதமாக படத்தில் சப்பாணி – மயிலு மொய் பணத்திற்கு முன்பாக மொய் பணம் வைப்பவர்கள் ரூபாய் 1, ரூபாய் 1.50, 50 காசு என்றே வைப்பார்கள். இதன்மூலமே 5 ரூபாயின் அப்போதைய மதிப்பை உணரலாம்.


இவ்வாறு சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற வார்த்தை புழங்கும் முன்பே நம் தமிழ் சினிமாவிற்காக சினிமாட்டிக் யுனிவர்சை மிக எளிதாக எடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.