தமிழ் சினிமாவின் மிக பெரிய பொக்கிஷங்களில் ஒருவர் தான் இயக்குநர் இமயம் பாரதிராஜா. தமிழ் சினிமாவையே தன்னுடைய சுவாசமாக மூச்சு காற்றாக சுவாசிக்கும் சிங்க தமிழன். ஸ்டுடியோ உள்ளேயே முடங்கி போன கேமராவையும் சினிமாவையும் கிராமத்து வாசம் வீசும் வயல்வெளிக்கு படையெடுக்க வைத்து படமெடுக்க வைத்து மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர். இன்று இருக்கும் பெரும்பாலான இயக்குநர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழ்ந்த தமிழ் மண்ணின் மைந்தன் பாரதிராஜா பிறந்தநாள் இன்று. 


 



 


1977ம் ஆண்டு '16 வயதினிலே' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த அவர் இன்று வரை கோடான கோடி ரசிகர்களை வசப்படுத்தி வைத்திருப்பவர். பல இளைஞர்களின் கனவுகளில் ஹீரோவாகி சினிமாவை நோக்கி படை எடுக்க  வைத்தவர். அவரின் பட்டறையில் பயிற்சி பெற்ற பலரும் இன்று பிரபலமான இயக்குநர்களாக இருப்பதே அதற்கு ஒரு சான்று. சினிமா தெரியாதவருக்கு கூட மானசீக குருவாக இருந்து சினிமா கற்றுக்கொடுத்தவர். தமிழ்நாட்டு கிராமங்களின் வாழ்வியல், நம்பிக்கை, கனவு, ஆசை என அனைத்தையும் ரத்தமும் சதையுமாக சினிமா மூலம் பதிவு செய்ய முடியும் என்பதை சாத்தியப்படுத்தியவர். 


சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில், வேதம் புதிது, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள்,  கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா என காலத்தால் அழியாத பல அற்புதமான காவியங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு புது ரத்தத்தை பாய்ச்சியவர். உணர்வுபூர்வமான கதைக்களத்தோடு சேர்ந்து சிந்தனையை தூண்டும் கருத்தை எதார்த்தமாக நிலைநிறுத்தி இருப்பார். இப்படி ஒரு படத்தை பார்த்ததே இல்லையே என தமிழ் ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு வித்தியாசமான ஒரு சினிமாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ட்ரெண்ட் செட்டர். அவரின் கதாபாத்திர கட்டமைப்பு, கதாபாத்திரங்களின் பெயர்கள், கதைசொல்லல், எடிட்டிங் என அனைத்துமே திரை ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது. பாஞ்சாலி, பரஞ்சோதி, சப்பாணி, மயிலு, குருவம்மா, பரட்டை என கேட்டறியாத பெயர்களை வைத்ததிலேயே அவரின் வெற்றி நிச்சயமானது.  


 



 


வைரமுத்து, பாக்யராஜ், விஜயன் முதல் ராதிகா, ரேவதி, வடிவுக்கரசி உள்ளிட்ட எண்ணற்ற திறமையான கலைஞர்களின் திரை பயணமே பாரதிராஜாவால் தான் அரம்பமானது. தேசிய விருது,பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, தமிழக அரசின் மாநில விருது என பல விருதுகளும் பாரதிராஜாவின் கைகளில் கொஞ்சி விளையாடின.   


80ஸ் காலகட்டத்தில் தொடர் வெற்றி எல்லாம் சாத்தியமே இல்லாமல் இருந்தது. ஆனால் அதை சாத்தியப்படுத்தி அடுத்தடுத்து 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் என தொடர் வெற்றிகளை அதுவும் திரையரங்கில் 200 , 300 நாட்கள் கொண்டாடப்பட்ட படங்களாக கொடுத்து சரித்திரத்தில் தன்னுடைய பெயரை செதுக்கி வைத்தவர். இயக்குநராக ஆளுமையும் திறமையும் கொண்ட பாரதிராஜா சமகாலத்தில் நடிகராகவும் பரிணாமம் எடுத்து அசத்திவருகிறார். இன்றும் மனதளவில் இளமையாக இருக்கும் பாரதிராஜாவுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!