பாக்யராஜ்-இளையராஜா கூட்டணியில் முத்தான பல பாடல்கள் வந்தாலும், ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து போனார்கள். இளையராஜா அவமானப்படுத்தியதால் தான் பாக்யராஜ், தானே ஒரு இசையமைப்பாளராகி, தன் படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார் என்று பேச்சும் இருந்ததும். இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாக்யராஜ், உண்மையில் தனக்கும் இளையராஜாவுக்கும் என்ன நடந்தது என்று கூறியுள்ளார். இதோ அந்த பேட்டி:




’’இளையராஜா சின்னவீடு படம் வரைக்கும் என்னுடை படங்களில் இசையமைத்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு படத்திற்கும் வழக்கமா, அடுத்த படம் குறித்து முன்னாடியே தெரிவித்துவிடுங்கள் என்று என்னிடம் கூறுவார். நானும் ஸ்கிரிப்ட் ரெடியானதும் அவரிடம் கூறிவிடுவேன். அப்படி தான் ஒருமுறை ஸ்கிரிப்ட் ரெடியானதும், ஸ்டூடியோவிற்கு சென்றேன். அவருடைய உதவியாளர் இருந்தார். அவரிடம் ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது. நான் தயாராக இருக்கிறேன்; சார் ரெடியானதும் சொல்லுங்க என்று கூறினேன். 


வழக்கத்திற்கு மாறாக அந்த உதவியாளர் என்னிடம், ‛சார் வீட்டில் இருப்பார், அங்கே போய் பாருங்க..’ என்றார். ‛இது என்ன புதுசா இருக்கே..’ என தோன்றியது. ‛இது என்ன புதுசா இருக்கு... எதுக்கு திடீர்னு வீட்ல போய் பார்க்கச் சொல்றீங்க’ என நான் கேட்டேன். அதற்கு அவர், ‛இல்ல... இல்ல... வீட்ல போய் பாருங்க... பார்ப்பாரு...’ என்றார். ‛என்னங்க இது... ஸ்டூடியோல தானே இருப்பாரு; இங்கே தானே பார்ப்பேன்; இப்போ ஏன் திடீர்னு வீட்ல போய் பார்க்கச் சொல்றீங்க? எனக்கு புரியலையே’ என்று கேட்டேன். 


ஆனால், அந்த உதவியாளர் அவர் கூறுவதில் தான் உறுதியாக இருந்தேன். ‛சரி, நான் வந்துட்டு போனேன் என்று அவரிடம் கூறுங்கள்; தேவைப்பட்டால் வந்து பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன். வீட்ல விசேசம் என்றால் பார்க்கலாம், உடல்நிலை சரியில்லை என்றால் பார்க்கலாம், இல்லை நான் புதிதாக வந்திருந்தால் கூட சொல்லலாம், நான் ஏற்கனவே பணியாற்றிய நபர் தான், என்னிடம் ஏன் இப்படி கூறினார் என தெரியவில்லை. 


அதுக்கு அப்புறம் என்ன நடந்தது என தெரியவில்லை. இளையராஜாவிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. எனக்கு என்ன தோன்றியது என்றால், எத்தனை நாள் சும்மா சுற்றித்திரிந்தோம்; ஊரில் மாடர்ன் ஆர்க்கெஸ்டா இருக்கும். கல்யாண கச்சேரிக்கு வாசிப்பார்கள். எனக்கு அப்போது அதைப்பற்றி பெரிதாக தெரியவில்லை. ஆனால், அந்த சம்பவத்தன்று எனக்கு தோன்றியது, ‛சும்மா கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், அங்கிருந்த இசைக்கருவிகளை வாசிக்க கற்றிருக்கலாம்’ என்று. இந்த அசிங்கத்தை சந்தித்திருக்க வேண்டியதில்லையே என்று தோன்றியது. 


அதே நேரத்தில் , ‛சரி இப்போ கூட என்ன போச்சு... டைம் கிடைக்கும் போது அதை கற்றுக் கொள்வோமே‛ எனத் தோன்றியது. அந்த நேரத்தில் சுதாகர் என்ற மாஸ்டர் இருந்தார். கோயம்புத்தூரில் என் நாடகத்திற்கு இசைத்தவர். ஆங்கிலம் மாஸ்டர். அந்த நேரம் பார்த்து அவர் இங்கு வந்தார். அவரிடம் ஆர்மோனியம் பழகும் விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் ஆர்வமாக கற்றுக்கொடுத்தார். ஸ்ருதி பிடித்ததும், என்னை அறியாமல் ட்யூன் வந்தது. அதை அவரிடம் கூறுனேன். அவரிடம் பாடி காட்டினேன். சரணம் பிடிங்க என்றார். சரணம் பிடித்து பாடினேன். 



‛இனி நீங்கள் ஆர்மோனியம் கற்று இசை அமைக்க நேரம் எடுக்கும்; உங்களுக்கு எளிதாகவே மியூசிக் வருகிறது. அதனால் நீங்கள் ஹம் பண்ணுங்க, நாங்கள் வாசிக்கிறோம். சந்தேகம் இருந்தால் நீங்கள் சரி செய்யுங்கள் என்றார். அவர் சொன்னதுக்கு அப்புறமும் எனக்கு சந்தேகம் இருந்தது. விஸ்வநாதன் சாரிடம் வாசித்து காட்டினேன். அதை கேட்டு, ஹிட் தம்பி என்றார். 


எங்க சின்ன ராஜா படத்திற்கு சங்கர் கணேஷ் சார் மியூசிக் பண்ணிட்டு இருந்தார். அவரிடம் ட்யூன் கொடுத்த கம்போஸ் பண்ண சொன்னோம். அது சிறப்பாக வந்தது. அதை வைத்து தான் இது நம்ம ஆளு படத்திற்கு இசையமைக்கத் தொடங்கினேன். இப்படி தான் இசையமைப்பாளராக மாறினேன்,’’


என்று அந்த பேட்டியில் பாக்யராஜ் தெரிவித்தார்.