தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக உருவெடுத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டூட். இந்த படம் ரூபாய் 100 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி வெற்றிப்படமாக மாறியது. 

Continues below advertisement

இந்த படம் குறித்து பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது. இந்த படம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, 

மிஸ் ஆகிவிட்டது:

டூட் படத்திற்கு நானும் எதிர்பார்ப்புடனே இருந்தேன். நான் தாமதமாகத்தான் பார்த்தேன். நல்ல விஷயங்களையோ, கெட்ட விஷயங்களையோ நாம் சென்றுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. காரசாரமான பேட்டிகள் செய்திகள் அந்த படம் குறித்து வந்தது. ஏராளமான விமர்சனங்கள் வந்தது. இது கலெக்ஷன் வந்தது. 

Continues below advertisement

பிரதீப் ரங்கநாதன் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நான் கோமாளி படம் பார்த்தவுடனே ஐசரி கணேஷ்க்கு போன் செய்து, இந்த பையனை விட்ராதீங்க. இவன் நீண்ட காலத்திற்கான ஒரு டெக்னீசியன். நல்லா படம் பண்ணிருக்காரு. நீங்கதான் அறிமுகப்படுத்தி வச்சுருக்கீங்க. அடுத்த 2 படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணிருங்க. அந்த படம் பார்த்தபோது ஒரு இயக்குனரின் வேலை, திரைக்கதை, சீன் செய்த விதம் அவ்வளவு அருமையாக இருந்தது. அது எப்படியோ மிஸ் ஆகிடுச்சு.

நல்ல அபிப்ராயம் இருந்தது:

பிரதீப் ரங்கநாதன் மீது நல்ல அபிப்ராயம் இருப்பதால், இந்த படம் மீது எதிர்பார்ப்பு இருந்தது. பிரதீப் ரங்கநாதன் அனுபவசாலி என்பதால் சரியாக கதை கேட்டு, படம் செய்திருப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் வந்த பிறகு எல்லாரும் அந்த 7 நாட்கள் பேசுறாங்க என்றால், அது மாதிரி முயற்சி பண்ணாங்க. ஆனால் மிஸ் ஆகிடுச்சுனு விமர்சனத்தை வச்சாங்க. அதுனாலயே பாக்கனும்னு பாத்தேன்.

படம் எடுப்பதில் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. அது அவரவர் உரிமை. எதை வேண்டுமென்றால் எடுக்கலாம். பார்ப்பது மக்கள். மக்களிடம்தான் அதற்கான முடிவு உள்ளது. இந்த படத்தில் அவர் ஒரு புது முயற்சி என்று ஒன்றை செய்திருக்கிறார்கள். வித்தியாசம் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் செய்திருக்கிறார்கள். இந்த களத்தில் 2, 3 முறை படம் ஏற்கனவே வந்துள்ளது. 

கணவன் - மனைவி:

திருமணம் என்பதை ஆரம்பத்தில் இருந்து காமெடியாக சொன்னார்கள். காமெடியிலும் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால், வித்தியாசம் இருக்கிறது. காமெடியா சொல்வதற்கு இவர்கள் எடுத்துக்கொண்ட களம் மிகவும் சென்சிடிவான விஷயம். உலகளவில் கணவன் - மனைவிக்கு என்று சில விஷயங்கள் இருக்கிறது. அவர்கள் நினைத்த மாதிரி ஒர்க் ஆகவில்லை. முன்னால் வைத்த காட்சிக்கு பின்னால் வைத்த காட்சிகள் ஒர்க் அவுட்டாகவில்லை. 

இதற்கு முன்பு வந்த படங்களில் தியாகம் அப்பழுக்கில்லாமல் இருக்கும். புவனா ஒரு கேள்விக்குறி இப்படித்தான் இருக்கும். ஒரு பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்ற தியாகத்தில் அந்த படம் இருக்கும். இதுபோன்ற ஆழத்தை விளையாட்டுத்தனமாக கூறியதால் மக்களுக்கு ஒட்டவில்லை. நான் 10வது நாள் போலதான் சென்றேன். கூட்டம் இல்லை. 

2 கே கிட்ஸ்க்கு பிடிக்காது:

படம் பார்த்த பிறகுதான் ரீப்பிட் ஆவதற்கோ, வெளியில் சென்று மற்றவர்களிடம் சென்று பாருங்கள் என்று சொல்வதற்கோ இதில் இல்லை. இது 2 கே கிட்ஸ்க்கு பிடிக்கும் என்று பேருக்கு சொல்லலாம். அவனுக்கும் அப்பா, அம்மா, உறவுகள் இருக்கும். எல்லா உறவுமுறைகளையும் 2 கே கிட்ஸ் இருப்பார்கள் என்றால் இந்த படம் இன்னமும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அனைத்தையும் டேக் இட் ஈஸி என்று போகிறார்கள். சரத்குமார் நன்றாக நடித்துள்ளார். ஆனால், அது இளையோடி வரவில்லை. இந்த படத்தில் ப்ராங்க் என்ற வார்த்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள் எனக்கு இந்த படமே ப்ராங்க் என்று கூறிவிட்டால் சந்தோஷம்.

இவ்வாறு அவர் கூறினார்.  அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் டூட். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படம் கணவன் -மனைவி உறவு குறித்து பேசிய விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இந்த படத்தை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.