இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தமிழ் சினிமாவில் நிறைய முக்கியமான திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதில் நடிகர் விக்ரம் நடித்திருக்கும் தங்கலானும் ஒன்று. விக்ரமின் கரியரில் மிக முக்கியமான படமாக தங்கலான் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை உயரங்களைத் தொட்டாலும் சில நடிகர்களின் குணங்கள் மாறுவதில்லை. தங்கலான் படத்திற்கு எந்த அளவிற்கு ஈடுபாட்டோடு விக்ரம் இருக்கிறாரோ அதே அளவிற்கான ஈடுபாட்டை தனது தொடக்க காலத்தில் தான் நடித்தப் படங்களுக்கும் செலுத்தியிருக்கிறார் விக்ரம். சமீபத்தில் பாலாஜி சக்திவேல் விக்ரம் குறித்து பேசியது இதையே உறுதிப்படுத்துகிறது...
சாமுராய்
2002-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சாமுராய். இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் பாலாஜி சக்திவேல். விக்ரமின் கரியரில் மிக முக்கியமான படமாக சாமுராய் படம் அமைந்தது. சமீபத்தில் இந்தப் படத்தின் 21 ஆண்டு நிறைவு நாள் ரசிகர்களாக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு படத்தின் படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது இந்த படத்திற்கு நடிகர் விக்ரம் செலுத்திய உழைப்பைப் பற்றி மிக உற்சாகமாக பேசினார் அவர்.
மூங்கில் காடுகளே
சாமுராய் படத்தில் இடம்பெற்ற மூங்கில் காடுகளே பாடல் இன்றுவரை அனைவரும் ரசிக்கும் பாடலாக இருந்து வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு எல்லாத் தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களும் இருக்கிறார்கள். இந்தப் பாடலில் இடம்பெற்ற இயற்கை காட்சிகள் மனம் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததும் மற்றொரு காரணம். இந்தப் பாடல் குறித்து பாலாஜி சக்திவேல் பேசியபோது. ”நான் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக வேலை செய்திருந்ததால் என் முதல் படத்திற்கு எனக்கு வேண்டியதை எல்லாம் எனது தயாரிப்பு நிறுவனம் எனக்கு கொடுத்தது. பாடல் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் நிறைய லொகேஷன்கள் சென்றோம். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை மட்டும் மொத்தம் மூன்று ஸ்டண்ட் மாஸ்டர்களைக் கொண்டு இயக்கினேன். ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் ஒவ்வொருவர் வடிவமைத்தார்கள். எனக்கு தேவையான அத்தனையும் கிடைத்ததால்தான் இந்தப் படத்தை நான் நினைத்த மாதிரி எடுக்க முடிந்தது.” என்று அவர் கூறினார்.
விக்ரமின் ஈடுபாடு குறையவேயில்லை
தனது முதல் படத்தில் விக்ரமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய பாலாஜி சக்திவேல் “சாமுராய் படத்தில் விக்ரம் தனது முழு ஈடுபாட்டுடன் நடித்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் முழுவதுமாக ஒன்றி நடித்தார் அவர். இப்போது தங்கலான் படத்தில் அவரது ஈடுபாட்டை நாம் அனைவரும் பார்க்கிறோம் இல்லையா?! அதை பார்க்கும்போது அதே ஈடுபாட்டுடன்தான் அவர் சாமுராய் படத்திலும் நடித்திருந்தார் என்பது வியப்பாக இருக்கிறது.
தங்கலான்
பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி, உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது . அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தங்கலான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.