தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் பாலா. சேது படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான பாலா அடுத்தடுத்து இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, நாச்சியார் ஆகிய படங்கள் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக பாலாவை கொண்டு சேர்த்தது. குறிப்பாக, நடிகர்கள் விக்ரம் மற்றும் சூர்யா இருவரது திரைவாழ்விலும் திருப்பத்தைத் தந்த இயக்குனராக பாலா உள்ளார்.
தகதகவென பாடல்:
விக்ரமிற்கு சேது படமும், சூர்யாவிற்கும் நந்தாவும், ஆர்யாவிற்கு நான் கடவுள் படமும், விஷாலிற்கு அவன் இவன் படமும் என ஒவ்வொரு நடிகரையும் வேறு பரிணாமத்தில் காட்டியவர் பாலா. இவரது இயக்கத்தில் விரைவில் வணங்கான் படம் ரிலீசாக உள்ள நிலையில் பாலாவின் 25 ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில், மூத்த நடிகரும், நடிகர் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் பாலாவை பேட்டி எடுத்தார். அப்போது, அவரிடம் ஸ்ரீவித்யாவும் நானும் நடித்த தகதக-வென பாட்டு அசாத்தியமான பாட்டு. அந்த பாட்டில் நான் உயிரைவிட்டு நடித்துள்ளேன். அந்த பாட்டில் சூர்யாவையும், சிம்ரனையும் ஆட வைத்து கிண்டல் பண்ணிவிட்டான். என்னை மானபங்கம் பண்ணனும்னு பண்ணியா? காமெடிக்காக பண்ணியா? மகனே சொல்லு நீ மனசுல என்ன நினைச்சு அதை பண்ண? என்று கேட்டார்.
நகைச்சுவை:
அப்போது, அவருக்கு பதில் அளித்த இயக்குனர் பாலா, உங்களோட ஆட்டமும், உங்க கூட ஆடுனவங்க ஆட்டமும் ரொம்ப நகைச்சுவையா இருந்துச்சு என்றார். அதைக்கேட்ட ரசிகர்கள் கைதட்டி சிரித்தனர். சிவகுமார் அதிர்ச்சியில் உறைந்தார். உலகம் முழுவதும் கொண்டாடிய இந்த பாட்டு உனக்கு நகைச்சுவையா இருந்துச்சா? என்று சிரித்துக் கொண்டே கேட்டார். உன் மேல கேஸ் போடப் போறேன். என்னயா இப்படி சொல்றான் இந்த பையன்? அடப்பாவிகளா! மிக்க மகிழ்ச்சி!
இவ்வாறு அவர் கூறினார்.
பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் சூர்யா - சிம்ரன் நடனத்தில் அதிரடி குத்துப்பாடலாக தகதக-வென பாடல் உருவாகியிருக்கும். 1973ம் ஆண்டு வெளியான காரைக்கால் அம்மையார் என்ற படத்தில் சிவகுமாரும், ஸ்ரீவித்யாவும் தகதக-வென சிவபெருமானாகவும், பார்வதி தேவியாகவும் இந்த பாடலுக்கு ஆடியிருப்பார்கள். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதேபோல, பிதாமகன் படத்தில் இடம்பெற்ற தகதக-வென குத்துப்பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிதாமகன் படத்தில் சூர்யா - விக்ரம் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. லைலா, சங்கீதா கதாநாயகியாக நடித்திருப்பார்கள்.