இயக்குநர் பாலா இயக்கி ஆர்யா, விஷால் நடித்து வெளியானத் திரைப்படம் அவன் இவன். இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது அவன் இவன் திரைப்படம்.


சில நேரங்களில் எளிய மக்களின் வாழ்க்கையில் உள்ள கொண்டாட்டங்களை, நகைச்சுவையை, காரணமற்ற அன்பை திரைப்படங்களில்  பாலாவை விட அழகாக வேறு யாரும் காட்டவில்லை என்று தோன்றும். மிகைப்படுத்துவதாய் தோன்றினால் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்


அவன் இவன் திரைப்படத்தில் வரும் ஹைனஸ் கதாபாத்திரம் என்பவர் யார். ஒரு ஜமீன் பரம்பரையில் கடைசி வம்சாவளி, எல்லாவற்றையும் இழந்தப் பின்னும் அதே வாழ்க்கை முறையை உள்ளூரில் வாழ்ந்துகொண்டிருப்பவர். வணங்காமுடி (விஷால்) கும்புடுறன் சாமி ( ஆர்யா) ஆகிய இருவருக்கும் என்ன உறவு. யாரும் இல்லாத அவருக்கு எங்கிருந்தோ வந்த இந்த இருவர் மகன்களைப் போல் இருக்கிறார்களே. அவருடன் சேர்ந்து குடித்து கண்ணீர் வடிக்கிறார்களே. இதெல்லாம் எதற்காக என்பதை தெரியாமலே இந்தக் காட்சிகளை நம்மால் ரசிக்க முடிந்தது இல்லையா. ஹைனஸ் இறந்தபோது ஏன் இந்த இருவருக்கு அவ்வளவுப் பெரிய இழப்பாய் அது இருக்கிறது.


கதையில்லாதக் கதை


கிட்டதட்ட கடைசி இறுபது நிமிடங்கள் வரை இந்தப் படம் எதை நோக்கி போகிறது என்றே பார்வையாளர்களுக்குத் தெரிவதில்லை. ஆனாலும் அது யாருக்கும் அவ்வளவுப் பெரிய பிரச்சனையாக தெரியவில்லை. எத்தனை முறை பார்த்தாலும் காட்சிகள் சலிப்படையாமல் நம்மை நகர்த்திச் செல்கின்றன. ஒரு தரப்பில் படத்தின் பலம் என்றும் மறு தரப்பில் படத்தின் பலவீனம் என்றும் இதனைச் சொல்லலாம்.


நிர்வானமான பாஷை, பெண் தன்மைக் கொண்ட முக்கிய கதாபாத்திரம், என படத்தில் நாம் பார்க்கும் எதையும் நிஜ உலகில் பார்த்தோமானால் முகத்தை சுளித்துக்கொண்டு சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதனை ரசிக்க வைத்திருக்கிறார் பாலா. சொல்லப்போனால் கடைசி இறுபது நிமிடங்களில் தான் படம் நிலையான கதை ஒன்றை நோக்கி  நகர்கிறது ஆனால் இந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அது தேவையற்றதாகவும் தோன்றி விடுவதே இந்தப் படத்தின் மிகப் பெரியக் குறை.


படத்தில் இருக்கும் மற்றுமொரு குறை என்றால் எந்த வித நோக்கமும் இல்லாமல் கதாநாயகிகள். ஆர்யா ஜீவா ஆகிய இருவருக்கும் ஜோடிகளாக வரும் கதாநாயகிகளை நீக்கிவிட்டால் கூட படத்தின் எதுவும் குறைந்தது போலவே தெரியாத அளவிற்கு பயணற்றவர்களாக வந்து செல்பவர்கள். இன்று திரைக்கதைக்கு மெனக்கெடும் அதே அளவு கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் ஒரு கச்சிதமான ஒரு படமாக அமைவதற்கான அத்தனை வாய்ப்புகளும் அவன் இவன் படத்திற்கு இருந்தது. ஆனால் அதனைச் செய்யத் தவறிவிட்டார் பாலா என்றுதான் சொல்ல வேண்டும்.