தென்னிந்திய சினிமாவின் ஜாம்பவான்களின் ஒருவரான பாலுமகேந்திராவின் பட்டறையில் செதுக்கப்பட்ட ஒரு கலைஞன் பாலா. திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு என்பதையும் கடந்து பலரும் பேசத் தயங்கும் சில விஷயங்களை அசாத்தியமான துணிச்சலுடன் கையிலெடுத்து, அதை அழுத்தமான திரைக்கதைக்குள் பொருத்தி மக்களுக்கு அதை திரைப்படம் வாயிலாக காட்சிப்படுத்தி அடிவயிற்றில் இருந்து உலுக்கி எடுத்து விடுவது தான் பாலாவின் தனிச்சிறப்பு. 


 


24 years of Sethu: இயக்குநர் பாலாவை தந்த படம்.. 'சீயான்' விக்ரமுக்கு அடையாளம்.. 24 ஆண்டுகளை கடந்த 'சேது'!


விக்ரமின் அடையாளம் :


பல ஆண்டுகாலமாக திரைத்துறையில் இருந்தாலும் அங்கீரிக்கப்படாத துரதிஷ்டமான ஒரு கலைஞனாக தமிழ் சினிமாவில் இருந்து வந்த நடிகர் விக்ரமுக்கு விலாசமாய் அமைந்து, அவரின் திரைப்பயணத்தில் ஒரு டர்னிங் பாயிண்டை கொடுத்த படம் 'சேது'. இப்படத்திற்காக சுமார் 13 கிலோ வரை எடை குறைத்தார். 


வெற்றியின் முதல் படி:


தோல்விகளை மட்டுமே சந்தித்த விக்ரம் 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு  முதல் முறையாக 'சேது' படத்தின் மூலம் வெற்றியின் முதல் படியைத் தொட்டார். அப்படத்தில் சீயான் என அழைக்கப்பட்ட விக்ரமுக்கு, அதே அவரின் அடையாளமாக மாறி இன்று வரை சீயான் விக்ரம் எனக் கொண்டாடப்படுகிறார். 'சேது' படத்தின் மூலம் செகண்ட் இன்னிங்க்ஸை துவங்கிய விக்ரமின் விளையாட்டு, இன்று வரை ஏறுமுகமாகவே அமைந்து மாஸ் நடிகராக கெத்து காட்டி வாருகிறர். விக்ரமின் பொறுமையான காத்திருப்பு தான் அவரை விஸ்வரூபம் எடுக்க வைத்து. 


 



ஏர்வாடியின் தாக்கம் :


ஏர்வாடி என்றால் என்ன என்பது தெரியும் ஆனால் அதற்குள் ஒரு முறை பயணம் செய்த பாலாவின் தாக்கம் தான் 'சேது'  படம் உருவாக காரணமாய் அமைந்தது. மனநிலை பாதித்த மக்களுக்கு பின்னால் ஒரு அழகான கதை இருக்கும். அவர்களின் மனநிலை பாதிக்க ஏதோ ஒன்று காரணமாக இருந்து இருக்கும். அதை மையப்புள்ளியாக வைத்து ஒரு திரைக்கதையை அமைத்து பார்வையாளர்களின் மனதை கனக்க செய்தவர் இயக்குநர் பாலா. 


இளையராஜாவின் இசை :


'சேது' படம் ஒரு 24 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஒரு கனக்கும் கவிதையாக இருப்பதற்கு பாலாவின் இயக்கம், விக்ரமின் நடிப்பு மற்றும் இசைஞானி இளையராஜாவின் உருக வைக்கும் இசை தான் என்றால் அது மிகையல்ல. அவரின் தளும்பும் குரலில் ஒலிக்கும் 'எங்கே செல்லும் இந்த பாதை...' பாடல் இன்று கேட்டாலும் கண்கள் குளமாகும். தமிழ் சினிமாவின் ட்ரெண்ட்டை மாற்றிய ஒரு மைல்கல் 'சேது'. 


 



சேது தான் முன்னோடி :


இன்று ஏராளமான படங்கள் சேதுவின் பாணியில் வெளியானாலும் அவை அனைத்திற்கும் முன்னோடியாக விளங்குவது பாலாவின் 'சேது' தான். இப்படம் வெளியான சமயத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆடியன்ஸ் கூட்டமே இல்லாமல் திரையரங்கமே வெறிச்சோடி காணப்பட்டது.


பிரபல பத்திரிகை ஒன்று சேது படத்தைப் பாராட்டி விமர்சனம் வெளியிட்ட பிறகு, மெல்ல மெல்ல திரையரங்கில் ஆடியன்ஸ் கூட்டம் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் சேது படத்தை அன்றைய சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். கிளைமாக்ஸில் வெற்றி பெரும் காதல் படங்களுக்கு மத்தியில், தோல்வி அடைந்த மிக உருக்கமான காதல் கதையை சமர்ப்பணம் செய்து பாலாவுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துகளும்.