ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஜவான் படத்தை விடவும் மிகவும் பிரமாண்டமான படம் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றது. அதற்கான பணிகள் போய்க்கொண்டு உள்ளது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அட்லீ, “ அடுத்த தலைமுறைக்கு எது தவறு என்பதைக் சொல்வதற்காகத்தான் எனது படங்களில் வன்முறைக் காட்சிகளை வைக்கின்றேன். ஒரு மருத்துவர் ஊசி போடும்போது நமக்கு வலிக்கத்தான் செய்யும் ஆனால் அது நமது உடலில் இருக்கும் நோயை குணப்படுத்த உதவுவதைப் போல் எனது படங்களில் அடுத்த தலைமுறையினருக்கு எது தவறு எனச் சொல்வதற்காகத்தான் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட வன்முறைக் காட்சிகளை நான் படமாக்குகின்றேன்.
நான் பான் இந்தியா சினிமா அல்லது தனிப்பட்ட மொழியில் வெளியாகும் சினிமா என நான் எதையும் பார்ப்பது கிடையாது. ஒரே இந்தியாதான். அதேபோல் தென்னிந்திய சினிமா, பான் இந்தியா சினிமா எனவும் நான் பிரித்துப் பார்ப்பதில்லை. கே.ஜி.எஃப் திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படம் கிடையாது. ஆனால் அந்த படத்திற்குப் பின்னர் நடிகர் யாஷ் குறித்து இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதேபோல்தான் புஷ்பா திரைப்படத்திற்குப் பின்னர் அல்லு அர்ஜுன் குறித்து இந்தியா முழுவதும் பேசப்பட்டது. லியோ படத்திற்குப் பின்னர் நடிகர் விஜய் குறித்து பேசப்பட்டது.
நான் ஹிந்தி திரை உலகில் நுழைந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது. எனது தயாரிப்பில் உருவாகிவரும் பேபி ஜான் திரைப்படம். இந்த படம் கட்டாயம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த படம் பெற்றோர்களுக்கானது. பெற்றோர்கள் எப்படி குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதை மைய்யப்படுத்தியதாக இருக்கும்.
எனது வாழ்க்கையில் அதிகப்படியான அதிசயங்கள் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த இயக்குநரான ஷங்கரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். நான் அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் உடன் பணியாற்றி உள்ளேன். இப்போது ஷாருக்கானுடன் பணியாற்றி உள்ளேன்.
நீங்கள் ஒரு விஷயத்திற்காக எதாவது மெனக்கெடுகிறீர்கள் என்றால் ஒருநாள் உங்களால் அதனை அடையமுடியும். நான் இப்போது இந்திய சினிமாவில் இயக்குநராக உள்ளேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் அதுதான். எல்லா சூழலிலும் நாம் எதாவது சவாலை எதிர்கொண்டுதான் வருகின்றோம். ஆனால் நாம் அதனை கடந்து வரவேண்டும். சவால் நாம் பிறந்த கணத்தில் இருந்து நம்முடன் இருக்கின்றது.
ஒரு சாதாரண மனிதன் 300 ரூபாய் செலவு செய்து ஒரு படத்தை பார்க்க வருகிறார். படம் மட்டும் இல்லாமல் அவர் வீட்டில் இருந்து திரையரங்கிற்கு வந்து செல்வதற்கு என மொத்தம் 6 மணி நேரம் ஆகின்றது. இந்த நேரத்திற்கும் அவர் செலுத்தும் 300 ரூபாய்க்கும் நான் உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன் “ இவ்வாறு பேசினார்.