விழுப்புரம்: 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 69,263 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.


அரசு பொதுத்தேர்வு 


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்...


தமிழ்நாடு முழுவதும் மேல்நிலைத் தேர்வு (முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2)) மற்றும் இடைநிலைப் (SSLC) பொதுத் தேர்வுகள் வரும் 01.03.2024 முதல் தொடங்கப்பட்டு 08.04.2024 வரை நடைபெற உள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வுகள் 01.03.2024 முதல் 22.03.2024 வரை நடைபெறவுள்ளது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 104 தேர்வு மையங்களில், 21,879 மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர்.


104 தேர்வு மையங்கள்


மேல்நிலை முதலாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வுகள் 04.03.2024 முதல் 25.03.2024 வரை நடைபெறவுள்ளது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 104 தேர்வு மையங்களில் 22,165 மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர்.


ஆயுதம் தாங்கிய காவலர்கள் மூலம் பாதுகாப்பு பணி


10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் 26.03.2024 முதல் 08.04.2024 வரை நடைபெறவுள்ளது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 58 தேர்வு மையங்களும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 68 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 126 தேர்வு மையங்களில் 25,219 மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்விற்கு 8 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், மண்டல அளவிலான 1 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும், 6 விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் (மேல்நிலை -3, இடைநிலை -3) 28 மேல்நிலை விடைத்தாள் எடுத்துச் செல்லும் வழித்தடங்களும், 34 இடைநிலை மையங்களுக்கு விடைத்தாள் எடுத்துச் செல்லும்  வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய காவலர்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திடவும், தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களில் ஒருவர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.


தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாட்கள் செல்வதை உறுதி செய்தல், விடைத்தாட்களை காப்பு மையங்களுக்கு கொண்டு செல்வதில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளவும், தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், போக்குவரத்துத்துறை சார்பில், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றிட தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திடவும், தேர்வு மையங்களில் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்தார்.