நடிகர் அதர்வா , கயாடு லோஹர் , ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள 'இதயம் முரளி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் அட்லீ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, "இது ஆகாஷ் பாஸ்கரனின் கதை" என்று அவர் குறிப்பிட்டது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
தனுஷின் இட்லி கடை , சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் இதயம் முரளி. டான் பிக்ச்சர்ஸ் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வா, ப்ரீத்தி முகுந்தன் , கயடு லோஹர் , டிராவிட் , தமன் , நிஹாரிகா , பரிதாபங்கள் சுதாகர் , ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதயம் முரளி குறித்து இயக்குநர் அட்லீ
இதயம் முரளி படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார் . அப்போது “ எனக்குள் ஒரு சின்ன வருத்தம் இருந்துகொண்டே இருக்கிறது. ராஜா ராணி படம் மாதிரி ஒரு காதல் படத்தை எடுக்கமுடியவில்லை என்று. அதன் பிறகு தளபதியால் தெறி , மெர்சன் , பிகில் . எதுக்கு இப்போ சொந்த பெருமை. ஒரு காதல் படம் எடுக்கமுடியவில்லை என்கிற ஏக்கம் எப்போவும் இருந்தது. நல்ல காதல் படத்தை தயாரிக்க வேண்டும் ஆகாஷிடம் கேட்டேன். ஆகாஷ் படம் காட்டினார் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இது கிட்டதட்ட ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம். இந்த படத்தில் வரும் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம் தான் நான். ஆகாஷின் கதைகளை எல்லாம் நான் கேட்டிருக்கிறேன். நான் அதர்வாவின் பெரிய ரசிகன். அதர்வாவிற்கு தேவைப்படும் அந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமையும். “ என்று அட்லீ கூறினார்.
