தமிழ் சினிமா கதாநாயகர்களை மைய்யப்படுத்திய சினிமாக்கள் என்பது ஒரு காலகட்டத்தில் அதிகமாக இருந்தது. அதன் பின்னர் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களுக்கு மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால், தமிழ் சினிமாவில் கதாநாயகனை மைய்யப்படுத்தி சினிமாக்கள் எடுத்துவந்த இயக்குநர்கள் அப்படியே தேங்கி விட்டனர்.




அட்லி - ஷாரூக்கான் - ஜவான்:


தமிழ் சினிமா இன்னும் முழுமையாக கதைக்களுக்கான சினிமாக்களை உருவாக்குவதில் முனைப்புடன் களமிறங்கவில்லை என்றாலும், அவ்வப்போது சில கதாநாயக பிம்பப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுவதுடன் நல்ல வசூலையும் பெற்று விடுகிறது. அப்படியான படங்கள் வரிசையில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட ஜெயிலர் படத்தினை கூறலாம். 


இந்நிலையில், இன்று அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் பாலிவுட் பாட்ஷா எனப்படும் ஷாரூக்கானின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியாகியுள்ளது. வழக்கமாக பாலிவுட்டில் ஒரு படம் ரிலீசாகிறது என்றால் அந்த படத்திற்கு தமிழ் சினிமா தளத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருக்காது. ஆனால் ஜவான் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்ததற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் ஜனரஞ்சகமான படங்கள் மூலம் ஹிட் கொடுத்தது மட்டும் வசூலில் முன்னணி இடத்திற்கு வந்த இயக்குநர் அட்லி இயக்கியதும் ஒரு காரணம். 





 


இயக்குநர் அட்லி இதுவரை ஜவான் படத்துடன் இணைந்து மொத்தம் 5 படங்கள் இயக்கியுள்ளார். இவற்றில் 4 படங்கள் நேரடியான தமிழ் படங்கள் இந்த தமிழ் படங்களில் 3 படங்கள் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான விஜய் நடித்த படங்கள். இந்நிலையில், அட்லி இயக்கிய 5 படங்கள் மீதும் இருக்கும் ஒரு விமர்சனம், தமிழ் சினிமாவில் ஏற்கனவே எடுத்த படங்களின் ஒன் லைனை மட்டும் எடுத்துக்கொண்டு கொஞ்சம் பட்டி டிங்கர் பார்த்து படமாக எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 


இதற்கு ஏற்கனவே அட்லி, “ நான் பார்த்த சினிமாக்களில் இருந்து உள்வாங்கிய சினிமாவை எடுக்கிறேன்” என ஏற்கனவே கூறியிருந்தார். இப்போது வந்துள்ள ஜவான் திரைப்படம் ஏற்கனவே அட்லி இயக்கிய படங்களில் இருந்தும் மற்ற படங்களில் இருந்தும் காட்சிகளை உருவாக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. குறிப்பாக “ஜவானிலும் மெர்சல் காட்டிய அட்லி” என பலர் தெரிவித்து வருகின்றர். 




அட்லீ பதில்:


இந்நிலையில், அட்லீ தன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அதில், “ ஏற்கனவே பார்த்த கதைகளை படமாக எடுக்கிறேன் என்பது மட்டும்தான் என்மீது வைக்கப்படும் ஒரே விமர்சனம். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், பா. ரஞ்சித் போன்ற நண்பர்கள் ஆக்‌ஷன், சமூக பிரச்னைஎன வெவ்வேறு விஷயங்களை மைய்யமாக வைத்து படங்கள் எடுக்கின்றனர். நடிகர்களை மைய்யப்படுத்தும் மாஸ் கமெர்ஷியல் திரைப்படங்கள் மீது நான் ஒருவன் மட்டும்தான் நம்பிக்கை வைத்துள்ளேன்.


எனவே என்மீது விமர்சனம் வரத்தான் செய்யும். பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை அளித்து என்னுடைய கதாப்பாத்திரங்கள் வாயிலாக அவர்களை உணர்ச்சிவசப்படுத்துவதுதான் எனது நோக்கம் இதுவரை அதை சரியாக செய்துள்ளேன் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.