என்னுடைய வாழ்க்கை இந்தளவுக்கு மாறி இருப்பது 100 பேர் எனக்கு கொடுத்த கை, வாழ்க்கைக்கு போட்ட பிச்சை என 1947 ஆகஸ்ட் 16  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். 


1947 ஆகஸ்ட் 16 


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “1947 ஆகஸ்ட் 16”. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும், அறிமுக நடிகை ரேவதி ஹீரோயினாகவும் நடித்துள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் என்.எஸ். பொன்குமார்  இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். 


கதை சொன்ன ஏ.ஆர்முருகதாஸ்


இந்நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் தான் கஷ்டப்பட்டு வந்த கதையை சொல்லி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவர் தனது உரையில், “எனக்கு சென்னையில் 60, 70 பேரை மட்டுமே தெரியும். அவர்களை மட்டுமே இந்நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளேன். இவ்வளவு நான் என்மேல் ரசிகர்கள் எவ்வளவு அன்பையும், ஆசீர்வாதத்தையும் வழங்குனீர்களோ அதை இந்த படக்குழுவுக்கும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நான் இந்நிகழ்ச்சிக்கு முதலில் சிவாவை அழைக்க மாட்டேன் என சொல்லிவிட்டேன். நான் கூப்பிட்டு அவர் வரமாட்டேன்னு சொல்லிட்டா எனக்கு வருத்தமா போயிரும் என அப்படி சொன்னேன். இந்த விழாவுக்கு வந்த அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார். 


மேலும் , “நான் இந்த படம் தயாரிக்க என்னுடைய உதவி இயக்குநர் பாலாஜி தான் காரணம். இதன் கதையை படித்தவுடன் இந்த படத்தை செய்ய ஒப்புக்கொண்டேன். கௌதம் கார்த்திக் படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஊட்டியில் வளர்ந்த அவருக்கு நம் ஊரின் அணுகுமுறைகள் எல்லாம் தெரியாது. ஆனால் அற்புதமான உழைப்பை கௌதம் வழங்கியுள்ளார். அவரின் அப்பா கார்த்திக்கை மனதில் வைக்காமல் எந்த ஒரு ரொமான்ஸ் காட்சிகளும் வைக்க முடியாது. துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு காட்சி வரும். அதனை கார்த்தியை மனதில் வைத்து தான் பண்ணேன். இது என்னை அறியாமல் வந்தது” என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார். 


அதேபோல், “1947 படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் வெளியாக உள்ளது.  ஏ,ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ் என்பது 100 பேர் செய்த உதவி. என்னுடைய வாழ்க்கை என்பது 100 பேர் போட்ட வாழ்க்கைப் பிச்சை, கடவுளின் ஆசீர்வாதம் தான் என நான் நினைக்கிறேன். நான் சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளேன். நானும் கிளாஸ், தட்டு கழுவி உள்ளேன். நிறைய கஷ்டப்பட்டு தான் வாழ்க்கையில் முன்னேறி வந்தேன். அதை இல்லை என்று சொல்லவில்லை.  


சினிமா என்பது பெரிய விஷயம் இல்லை. கஷ்டப்பட்டு ஒருவரை முன்னோடியாக கொண்டு செயல்படும்போது எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் வரலாம் என்பதை தான் சொல்கிறேன். அந்த வகையில் படத்தின் கதை தான் எல்லாம். நல்லவனுக்கு சாப்பாடு போடலாம். ஆனால் வல்லவனுக்கு வாய்ப்பு தான் கொடுக்க முடியும். அதன்படி பொன் குமாருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 


கதை சிறப்பாக இருந்தால் அவரை வாழ்த்துங்கள். சரியாக இல்லை என்றால் என்னை திட்டுங்கள். ஆனால் அதற்கு வாய்ப்பு இருக்காது என்று தான் நினைக்கிறேன். படம் மிகப்பிரமாதமாக வந்துள்ளது. எல்லாவற்றையும் விட கலை இயக்குனர் சந்தானம் இப்போது உயிருடன் இல்லை.  அவர் இல்லாதது ஒரு கவலையாக அமைந்து விட்டது” என கண் கலங்கியபடி  ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார். 1947 ஆகஸ்ட் 16  படம் ஏப்ரல் 7 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.