இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் மதராஸி. அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக மதராஸி இருக்கிறது. இப்படத்தை  ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ளது. ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , விக்ராந்த், பிஜூ மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இப்படம் வெளியாவதற்கு முன்பே படத்திற்கான புரோமோஷன் பணியை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்கிவிட்டார். பிரபல நாளிதழ் நடத்திய நிகழ்வில் பங்கேற்ற ஏ.ஆர்.முருகதாஸ், சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சிறுகதை எழுதியதாகவும். வாழும் வரை போராடு என்ற சிறுகதை விகடனில் வெளியானது. இதை படித்து விட்டு எங்கள் ஊரில் இருப்பவர்கள் அனைவரும் என்னை பாராட்டினார்கள். இதை பார்த்து தான் என் அப்பாவிற்கு என் மீது நம்பிக்கை வந்தது. இவன் ஏதோ பன்றான். இவன்கிட்ட ஏதோ இருக்கு என சொன்னார். அதை என்னால் மறக்க முடியாது என தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், என் படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்றுவிட்டது. ஆனால், அப்பா என்னுடன் இல்லை இறந்து விட்டார். அந்த நேரத்தில் ஒரு நேர்காணலில் நான் ஆளே இல்லாத கிரவுண்டில் சிக்ஸர் அடித்தது போல் இருப்பதாக சொன்னேன். நான் சொன்னதை தலைப்பாக வைத்து பெருமைப்படுத்தினர். அது போன்று இன்றைய இளைஞர்களை பார்க்கும் போது மகிழ்வாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அஜித்திற்கு தீனா, சூர்யாவிற்கு கஜினி, விஜய்க்கு துப்பாக்கி மாதிரி சிவகார்த்திகேயன் மதராஸி இருக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த முருகதாஸ், கஜினி மாதிரி ஸ்கீரின்ப்ளே, துப்பாக்கி மாதிரி ஆக்சன் படம் மாதிரி மதராஸி இருக்கும் என தெரிவித்துள்ளார். நான் இப்படத்தை எழுத தொடங்கும் போதே அப்படித்தான் முடிவு செய்தேன் என்றார். மேலும், சிவகார்த்திகேயன் மான் கராத்தே படத்தில் நடிக்கும் போது நேரடியாக டிவியில் இருந்து வந்தது போல் இருந்தது. ஆனால், இப்போது அவர் வளர்ச்சி 10 மடங்காக இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல படங்களை இயக்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தேன் என தெரிவித்தார். 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினருடன் கனிமா பாடலுக்கு நடனம் ஆடியது படு வைரலானது. தற்போது இதற்கு விளக்கம் அளித்த அவர், நான் நம்ம ஊர்காரங்க, நம்ம சொந்தம் மட்டும் தான் இருக்காங்க நினைத்து ஆடினேன். நான் ஊரில் இருந்து சென்னை வருவதற்குள் போன் மேல் போன் போட்டு, வாட்ஸ்அப்பில் ஷேர் பண்ணி தொந்தரவு பண்ணிட்டாங்க. அப்பதான் புரிந்தது, ஆஹா சமூகவலைதளத்தில் நிறைய பேர் பார்த்துள்ளனர் என்பது புரிந்தது. என் முன்னாடி 2 கேமராதான் இருந்தது. அதனால சின்னதா டான்ஸ் ஆடினேன் என்றார். 

மேலும், நடிகனாக இருக்க வாய்ப்பு இருக்கா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் நடித்தால் யார் பார்ப்பார்கள். எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. எனக்கு சிலையாக இருப்பதை விட சிற்பியாக இருக்க ஆசைப்படுகிறேன். நடிப்பை பொறுத்தவரை புகழும் பெயரும் அவர்களுக்கு தான் போய் சேர்கிறது. டெக்னீசியன்களுக்கு கிடைப்பதில்லை. நம்ம நேசித்த தொழிலை நல்லா பன்றோமா அதை பிடித்தபடி பண்ணனும் என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.