லியோ


விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கிறது. மிஸ்கின் , சாண்டி மாஸ்டர், அர்ஜுன், சஞ்சய் தத், அனுராக் கஷ்யப் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்கள். பல்வேறு நடிகர்கள் வில்லனாக நடித்திருந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் போதுமான முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை என்பது ரசிகர்களின் மனவருத்தமாக இருக்கிறது. குறிப்பாக இயக்குநர் அனுராக் கஷ்யப் ஒரு சில நிமிடங்களே படத்தில் வந்து போவது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அனுராக் கஷ்யப் லியோ படத்தில் நடிப்பது ப்ளான் இல்லை என்றும் தன்னுடைய நேர்காணல் ஒன்றைப் பார்த்து லோகேஷ் கனகராஜ் தன்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்ததாகவும் தற்போது இயக்குநர் அனுராக் கஷ்யப் தெரிவித்துள்ளார்.


அனுராக் கஷ்யபின் ஆசை


சில மாதங்களுக்கு முன்பு  நடைபெற்ற தென் இந்திய இயக்குநர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இயக்குநர் அனுராக் கஷ்யப் தமிழ்நாடு வந்திருந்தார். அப்போது அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தமிழ் படங்களையும் இயக்குநர்களையும் பாராட்டி பேசினார். அப்போது லோகேஷ் கனகராஜின் படத்தில் தான் ஒருமுறையாவது நடித்து சாகவேண்டும் என்று தனக்கு ஆசை இருப்பதாக கூறியிருந்தார்.


ஆசைய நிறைவேற்றிய லோகேஷ்


இதுகுறித்து பேசிய அவர் ”ஒரு நாள் லோகேஷ் கனகராஜ் எனக்கு ஃபோன் செய்தார். நான் அப்போது விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில்  நடித்துக் கொண்டிருந்ததால் சென்னையில் இருந்தேன். என்னுடைய நேர்காணலைப் பார்த்ததாகவும் நான் விளையாட்டிற்கு அப்படி பேசினேனா என்று அவர் என்னிடம் கேட்டார் . நான் சீரியஸாக தான் அப்படி சொன்னேன் என்று கூறினேன். அப்படி ஒரு கதாபாத்திரம் இப்பதாகவும் அந்த கதாபாத்திரம் இறந்துவிடும். அதில் நடிக்க எனக்கு விருப்பமா என்று லோகேஷ் என்னிடம் கேட்டார். நான் உடனே சம்மதித்தேன். என்னை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவழைத்து வெறும் மூன்றே மணி நேரங்களில் ஷூட் முடித்து என்னை அனுப்பி வைத்தார் லோகேஷ் கனகராஜ்.” என்று அனுராக் கஷ்யப் கூறியுள்ளார்.


லோகேஷுடன் வேலை செய்த அனுபவம்


லோகேஷுடன் வேலை செய்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார் இயக்குநர் அனுராக் கஷ்யப். “நான் அங்கு சென்றதும் அவர்கள் தங்களுடைய வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடைய காட்சிகளுக்காக ஏற்பாடுகளை தொடங்கினார்கள். நடிகர் விஜய் என்னிடம் இனிமையாக பேசினார். இயக்குநர் மிஸ்கினும் அங்கு இருந்தார். லோகேஷ் கனகராஜ் தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்கிற தெளிவு அவருக்கு இருக்கிறது. தேவையில்லாத ஒரு ஷாட் கூட அவர் எடுக்கவில்லை. அவர்களுடன் வேலை செய்தது எனக்கு மிக இனிமையான ஒரு அனுபவமாக இருக்கிறது” என்றார். 


அனுராக் கஷ்யப்


இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் அனுராக் கஷ்யப். கேங்ஸ் ஆப் வாஸிப்பூர் இவர் இயக்கியப் படங்களில் அதிகம் புகழ்பெற்றது. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் முதல் முறையாக  நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது சிற்சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போத் விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா படத்தில் முக்கிய வில்லனாக  நடித்துள்ளார்.