பிரபல திரைப்பட இயக்குநர் இ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சினிமா அறிமுகம் 


விழுப்புரத்தைச் சேர்ந்த இ.ராமதாஸ் கல்லூரியில் படித்த காலத்தில் திரைக்கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்து சினிமாவில் பணிபுரிய முயற்சித்துள்ளார். நடிகர் மனோபாலா மூலம் திரையுலக பிரபலங்கள் அறிமுகம் ஏற்பட்டது. தொடர்ந்து 1980 ஆம் ஆண்டு வெளியான கரடி என்னும் படத்துல் பாடலாசிரியராக இ.ராமதாஸ் அறிமுகமானார். ஆனால் இந்த படம் வெளிவரவே இல்லை. பின்னர் இயக்குநர் பி.எஸ்.நிவாஸின் “எனக்காக காத்திரு” படத்தில் திரைக்கதை எழுதினார். அதனைத் தொடர்ந்து சுமார் 6 படங்களில் இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 


அதன்மூலம் கிடைத்த தொடர்பை கொண்டு 1986 ஆம் ஆண்டு மோகன், சீதா நடித்த ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்னும் படத்தின் மூலம் ராமதாஸ் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து ‘ராஜா ராஜா தான்’, ‘ராவணன்’,‘வாழ்க ஜனநாயகம்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.


கின்னஸ் சாதனை படத்தில் பங்கு 


தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட  கின்னஸ் சாதனைப் படம் என்ற பெருமையை பெற்றுள்ள ‘சுயம் வரம்’ படத்தை இயக்கிய 9 இயக்குநர்களில் ஒருவராக ராமதாஸ் பணியாற்றியிருந்தார். இதில் பாண்டியராஜன், கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை அவர் இயக்கியிருந்தார். திரைக்கதை ஆசிரியராக பொன் விலங்கு, ராஜாளி, அந்தப்புரம், கண்ணாத்தாள், எதிரும் புதிரும், சங்கமம், கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார். 


நடிகராக அறிமுகம் 


2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராமதாஸ் தொடர்ந்து யுத்தம் செய், குக்கூ, காக்கி சட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, விசாரணை, மெட்ரோ, தர்மதுரை, ஒருநாள் கூத்து, விக்ரம் வேதா, அறம், கோலிசோடா 2, மாரி 2 ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் பரீட்சையமானார்.


மாரடைப்பால் மரணம் 


இந்நிலையில் தனது தந்தையும், எழுத்தாளரும், இயக்குநரும், நடிகருமான இ.ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதை அவரது மகன் கலைச்செல்வன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராமதாஸ் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.