இந்தியாவில் உள்ள சினிமா ‘வுட்’களில் அதிக பணம் புழங்குவதில் தமிழ் சினிமாவும் ஒன்று. இப்படியான தமிழ் சினிமாவில் வாரவாரம் சினிமாக்கள் ரிலீசாகி வருகின்றன. அந்த வரிசையில் இந்த வாரத்தில் அதாவது நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் தொடக்கத்தில் நேரடித் தமிழ் சினிமாக்கள் என்ற வரிசையில் மொத்தம் 6 சினிமாக்கள் வெளியாகவுள்ளன.


இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் என்றால் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள பார்க்கிங் திரைப்படம். இதையடுத்து  நான்கு படங்களில் ஒன்று பிக் பாஸ் புகழ் பாலா நடிப்பில் உருவாகியுள்ள வா வரலாம் வா படமும், அறிமுக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள சூரகன்,  மகிமா நம்பியாரின் நாடு  மற்றும் ரன்பீன் கபூரின் அனிமல் என மொத்தம் 6 திரைப்படங்கள் வெளியாகின்றது. 


நயன்தாராவின் அன்னபூரணி


அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய அன்னபூரணி நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள 75வது படமாகும். இயக்குநர் அட்லியின் ராஜா ராணி படத்தில் நயந்தாராவுக்கு ஜோடியாக நடித்த ஜெய்யுடன்  மீண்டும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமையற்காரராக ஆசைப்படும் ஒரு வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கதையைச் சொல்வதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று வெளியாகி உள்ள திரைப்படங்களில் பெரிய படமாக பார்க்கப்படுவது இந்தப் படம்தான். 


ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங்


நடிகர் ஹரிஷ் கல்யாண் முக்கிய வேடத்தில் நடிப்பில் உருவான தமிழ்த் திரைப்படமான பார்க்கிங் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகியுள்ளது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் தயாரிப்பில் உருவாகியுள்ள , பார்க்கிங் ஒரு திரில்லர் படம்  என்று கூறப்படுகிறது. இப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், ராம ராஜேந்திரன், இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


பாலாவின் வா வரலாம் வா 


பிக் பாஸ் தமிழ் சீசன் 6 மூலம் புகழ் பெற்ற பாலாஜி முருகதாஸ்.  வா வரலாம் வா படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். எல்ஜி ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, சவரணன் சுப்பையா மற்றும் மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன், பாலாஜி ஒரு சூப்பர் மாடலாக இருந்தார், அவர் ரூபாரு மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா 2018 என்ற பட்டத்தை வென்றிருந்தார்.  வா வரலாம் வா படமும் இன்று வெளியாகி உள்ளது. 


கார்த்திகேயனின் சூரகன் 


தேர்ட் ஐ சினி கிரியேஷன் சார்பில் கார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் சூரகன் சதீஷ் கீதா குமார் இயக்கி உள்ளார் சுபிக்ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன, ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கலைமாமணி ஸ்ரீதர், தியா, ஹாசினி பவித்ரா, தரமா விக்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


மகிமா நம்பியாரின் நாடு


சக்ரா மற்றும் ராஜ் இணைந்து தயாரித்து இயக்குநர் எம். சரவணனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நாடு. இந்த படம் முழுக்க முழுக்க மலை கிராம மக்களும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வரும் அரசு மருத்துவருக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுளை சுவாரஸ்யமாக காட்ட படக்கு முயற்சி செய்துள்ளது. 


ரன்பீர் கபூரின் அனிமல் 


பாலிவுட் ஸ்டார் ரன்பீர் கபூர் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவாரான ரஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள பக்கா ஏக்‌ஷ்ன் படம் தான் அனிமல். இந்த படம் நேரடியாக ஹிந்தியில் உருவாக்கப்பட்ட படமாக இருந்தாலும் தெலுங்கில் படத்திற்கான புரோமஷன் வேலைகளை மகேஷ் பாபுவை வைத்தே செய்தனர். இந்த படம் தமிழிலும் வெளியாகின்றது.


இது இல்லாமல் தெலுங்கில் அதர்வா எனும் படமும் ரிலீசாகின்றது.