இயக்குநரும், சின்னத்திரை நடிகர் போஸ் வெங்கட் ஒரே நாளில் சகோதரியையும், சகோதரனையும் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கன்னிமாடம் படத்தின் இயக்குநரும், சின்னத்திரை நடிகருமான போஸ் வெங்கட், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சமூகம் சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். இவர் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்தநிலையில், போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி நேற்று சென்னையில் எம்.எம்.டி.ஏ பகுதியில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து, சகோதரி வளர்மதி இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதன் சென்னை வந்துள்ளார்.






அப்போது, தனது சகோதரியின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ரங்கநாதன் கதறி கதறி அழுதுள்ளார். சரியாக அதே நேரத்தில், ரங்கநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவர்களது இறுதி ஊர்வலம் அறந்தாங்கியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


போஸ் வெங்கட்டின் கனவு: 


கன்னிமாடம் படத்தை தொடர்ந்து போஸ் வெங்கட், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படத்தை எடுப்பது தனது கனவு என தெரிவித்திருந்தார். மேலும்,இவர் திமுகவின் பேச்சாளராகவும், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். 


ஆரம்ப காலக்கட்டத்தில் சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக தனது வாழ்க்கையை தொடங்கிய போஸ் வெங்கட், அதனை தொடர்ந்து மெட்டி ஒலி தொடரில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். தொடர்ச்சியாக தனக்கு கிடைத்த சிறு சிறு வேடங்களையும் ஏற்று நடித்து அசத்தினார். 


நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மற்றும் சகோதரர் ரங்கநாதன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போஸ் வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.