இயக்குநர் அமீரின் முதல் படமான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் இன்று வெளியாகி 21 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இயக்குநர் அமீர் உருக்கமான அறிக்கை ஒன்றினைப் பகிர்ந்துள்ளார்.


அமீரின் 21 ஆண்டு பயணம்


மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமாகி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்த அமீர், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று மௌனம் பேசியதே வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் இணையத்தில் படத்தினை நினைவுகூர்ந்து வருகின்றனர்.


நடிகர் சூர்யா, நந்தா, த்ரிஷா, லைலா உள்ளிட்ட பலர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் வித்தியாசமான ஃபீல் குட் திரைப்படமாக அமைந்து ஹிட் அடித்தது. 2002ஆம் ஆண்டு வெளியான இப்படம் இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் அமீர் பகிர்ந்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


“மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம்.


கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்த போது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்களித்த தமிழக ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


ஒரு இயக்குனராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் "மௌனம் பேசியதே" வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.


இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.


சென்னையை நோக்கி - சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, "மௌனம் பேசியதே" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும், என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, த்ரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர் - நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்.!


என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிகர்களுக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக "மௌனம் பேசியதே" ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.!" எனத் தெரிவித்துள்ளார்.


பருத்தி வீரன் திரைப்படத்தில் தொடங்கிய அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையிலான மோதல், கடந்த சில வாரங்களாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது, இதனால்  அமீரின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.


பருத்தி வீரன் சர்ச்சை


அமீர் பொய்க்கணக்கு காண்பித்ததாக முதலில் தனியார் சேனலுக்கு ஞானவேல்ராஜா நேர்க்காணல் அளித்த நிலையில், அமீருக்கு ஆதரவாக சமுத்திரக்கனி, சேரன், வெற்றிமாறன் என பல இயக்குநர்கள் களமிறங்கினர். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து அமீரிடம் மன்னிப்பு கேட்டு ஞானவேல் ராஜா அறிக்கை பகிர்ந்தார்.


தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன் இந்த விவகாரத்தில் மௌனம் கலைத்த அமீர், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனைக் குறிப்பிட்டு பல விஷயங்களைப் பேசி இருந்தார். “நீங்கள் நேர்காணலில், "படம் வெற்றி பெற்று விட்டது.. அதனால், ஸ்டுடியே க்ரீன் நிறுவனத்தார் அமீருக்கு நஷ்ட ஈடு தரவேண்டும். ஞானவேல் அவர்கள் ஏதேனும் பணம் தரவேண்டும்..” என்று  கூறியிருக்கிறீர்கள். நான் பெற விரும்புவது யாசகம் அல்ல, என்னுடைய உரிமையை” எனப் பகிர்ந்திருந்தார்.