சூப்பர் ஸ்டாருக்கும், தளபதிக்கும் பக்கத்து மாநில ஸ்டார்கள் தேவைப்படுவதாக இயக்குநர் அமீர் விமர்சித்து பேசியுள்ளார் .


ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாயவலை’ படத்தில் சஞ்சனா ஷெட்டி, சரண் தீனா, சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் இயக்குநர் அமீர் முக்கியக் கேரக்டரில் நடித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. சென்னை, வடபழனியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் அமீர், வெற்றிமாறன், சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சினேகன், தீனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


அப்போது பேசிய இயக்குநர் அமீர், ”ஒரு தயாரிப்பாளராக இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் உங்களை சந்திக்கிறேன். இப்படத்தை எடுக்க முதல் காரணம் இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தான். இப்போது உள்ள பத்திரிகையாளர்களுக்கு இவரைத் தெரியாது. அதர்மம், அஜித், சத்யராஜ் நடித்த பகைவன், தடயம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நான் இவரிடம் உதவி இயக்குனராக ஆசைப்பட்டேன். எனக்கும் அவருக்குமான உறவு குறித்து யாருக்கும் தெரியாது.


எனது அனைத்து படங்களிலும் என்னுடன் இருந்தவர். சினிமா அறிவு உள்ளவர்களை ரசிப்பது தான் எனது வேலை. அவருக்கு சினிமா அதிகம் தெரியும். நிறைய நடிகர்களிடம் சென்றோம் ஆனால் யாரும் நடிக்க முன்வரவில்லை அதனால் பின்னர் நானே நடித்தேன்.


மேலும் எனது நண்பர்கள் என்மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரிக்க முன்வந்தனர். இப்படத்தை முழுவதுமாக முடித்து விட்டு உங்களை சந்திக்கிறேன். சீக்கிரமாக படத்தை முடித்துவிட்டேன். இது எனக்கே புது அனுபவமாக உள்ளது. வெற்றிமாறன் படத்தை பார்த்துவிட்டு, தானே வெளியிடுவதாக கூறினார். இது எங்களது டீமுக்கு கிடைத்த வெற்றி. அவருக்கு நன்றி. யுவன் சங்கர் ராஜா எனக்கு உதவியாக இருந்தார். ராம் படத்தில் இருந்து இப்போது வரை எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார் யுவன்” என்றார். 


நிகழ்ச்சிக்கு இடையே நீங்கள் பெரிய இயக்குநர், உங்களுக்கே வெற்றிமாறன் தேவைப்படுகிறாரே என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமீர், “இங்கு சூப்பர் ஸ்டாருக்கும் தளபதிக்கும் பக்கத்து மாநில ஸ்டார்கள் தேவைப்படுகின்றனர். எனக்கு வெற்றிமாறனோ வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவது புதிதில்லையே. சூர்யாவிடம் இருந்து நான் ஒதுங்கி விட்டேன். கொஞ்சம் கோபக்காரன் நான். சுயமரியாதையுடன் பயணிப்பவன். சூர்யா, கார்த்தியுடன் மீண்டும் இணைவேனா என்றால், வாய்ப்பு கிடைத்தால் பணியாற்றுவேன். ஜப்பான் படத்தின் விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை அதனால் நானும் போகவில்லை” என்றார். 


அமீரைத் தொடர்ந்து வெற்றிமாறன் பேசும்போது, ”வடசென்னை படத்துக்காக அமீரை சந்தித்தேன். என் படம் என்றதும் நடிக்கிறேன் என்றார். நண்பர்கள் எல்லோரும் இவர் மூன்று நாள்தான் என்றனர். ஆனால் இப்போது வரை இருவருக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லை. மனித உறவுகளின் ஏற்படும் சிறிய சம்பவம் எப்படி மாறுகிறது என்பது இப்படம். எனது படங்களை எல்லாம் பார்க்க அமீர், ரமேஷ் இருவரும் வருவார்கள். இப்படத்தில் எல்லா நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். அமீர் ஒரு நடிகராக நன்றாக பண்ணியுள்ளார். அமீரின் நட்புக்காக இதனை வெளியிடுகிறேன்” என்றார்.