நடிகனாக யோகி படம் தனக்கு திருப்தி தரவில்லை என்றும், அதனால் எனக்கு நஷ்டம் தான் ஏற்பட்டதாகவும் இயக்குநர் அமீர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் உள்ளிட்ட படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக மாறியவர் அமீர். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சுப்பிரமணியம் சிவா இயக்கிய இப்படத்தில் மதுமிதா, சுவாதி, வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் தென்னாப்பிரிக்கா அகாடமி விருது பெற்ற 2005 ஆம் ஆண்டு வெளியான Tsotsi திரைப்படத்தின் ரீமேக் ஆகும். ஆனால் இந்த படம் தோல்வியடைந்தது.
இந்த படம் வெளியாகி நேற்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது பருத்திவீரன் பிரச்சினையில் இருக்கும் அமீர், யோகி படத்தால் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியுள்ளார்.
அதில், “ஒரு நடிகனாக யோகி படம் திருப்தி தரவில்லை. ஒரு இயக்குநராக இருந்து நடிகராக போகும் நிறைய சிரமங்கள் இருந்தது. சுப்பிரமணிய சிவா இயக்குநராக இருந்து நான் கேமரா முன்பு நின்று கொண்டிருந்தபோது கூட இயக்குநர் என்ற மனநிலையே இருந்தது. என்னை நடிகனாக பார்ப்பதில் ஒரு நம்பிக்கை வரல. யோகி கேரக்டர் குடிசைப் பகுதியில் உள்ள கதாபாத்திரம் என்பதால் தப்பித்து விட்டது. அந்த படத்தின் கிளைமேக்ஸ் ஃபைட் மட்டும் ஒரு மாசம் எடுத்தோம். என்னுடைய சொந்த படம் அது. தண்ணி போல செலவு பண்ணேன். கிளைமேக்ஸ் பார்த்ததும் அது செட்டாகவில்லை என தெரிஞ்சது . நான் அவரிடம், ‘படம் ஒரு கட்டம் வரை சரியாக சென்றது. ஆனால் அதன்பிறகு வேறு பாதையில் சென்று விட்டது’ என கூறினேன். ஆனால் சுப்பிரமணிய சிவா தனக்கு திருப்தி தருவதாக சொன்னார். அவருக்காக தான் படம் நடித்தேன் என்பதால் நான் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.
அதற்கு முன்னாடி மலையாளத்தில் மம்மூட்டி நடித்த பிக் பி படத்தை ரீமேக் செய்யலாம் என நினைத்தோம். அப்புறம் அதை விடுத்து நான், சுப்பிரமணியம் சிவா, சமுத்திரகனி எல்லோரும் சேர்ந்து ஒரு கதை எழுதி முடிச்சிட்டோம். ஷூட்டிங் போகலாம் என நினைக்கும்போது சிவா திடீர்னு வந்து தென்னாப்பிரிக்க படம் ஒன்றை கொடுத்து இதை பண்ணலாம் என சொன்னார். நாங்கள் அதிகாரப்பூர்வமாக ரீமேக் ரைட்ஸ் வாங்க சம்பந்தப்பட்ட படக்குழுவினரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை. அதனால் சில காட்சிகளை மாற்றி அந்த படத்தை எடுத்தோம். ஒரு நடிகனாக யோகி என்னை வெளியே கொண்டு வந்தாலும், தயாரிப்பாளராக அப்படத்தால் எனக்கு கிட்டதட்ட ரூ.2.80 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதுபற்றி ஒருநாள் கூட நான் பேசிக் கொண்டே கிடையாது. அந்த கடனை அடைப்பதற்கான கமிட் ஆனது தான் ஆதிபகவன் படம்” என தெரிவித்துள்ளார்.