ஒரு நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக இருந்து முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் நடிகர் சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி அதை தொடர்ந்த நடித்த கருடன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வரிசையில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வினோத் ராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், சூரி, அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'கொட்டுக்காளி' திரைப்படம் வெளியானது. இது ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வாழ்த்துக்களை குவித்தது என்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் வசூலை ஈட்டவில்லை.
கொடைக்கானல் மலைப்பகுதியை சுற்றியுள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள 'கெவி' படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் கலந்த கொண்ட இயக்குநர் அமீர் பேசுகையில் "ஒரு படம் வெளியாகிறது என்றால் அதன் கதை பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.அப்போது தான் அது மக்கள் மத்தியில் வெற்றி பெரும். அந்த வகையில் வாழ்வியலை காட்டிய 'வாழை' படம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது தான் வரவேற்பை பெற்றதற்கான முக்கியமான காரணம்.
அதே சமயம் சூரியின் 'கொட்டுக்காளி' ஒரு சிறப்பு திரைப்படம். அது சர்வதேச திரையிடலுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பான படம். அப்படி சர்வதேச விருதை பெற்ற ஒரு படத்தை வெகுஜன படங்களுடன் வெளியிட்டது சரியான முடிவல்ல.
என்னை பொறுத்தவரையில் 'கொட்டுக்காளி' படத்தை நான் தயாரித்து இருந்தால், நிச்சயம் அதை தியேட்டரில் வெளியிட்டு இருக்க மாட்டேன். வணிக நோக்கத்தில் அதை கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியமில்லை என நான் நினைக்கிறேன். அது சர்வதேச விருதுகளை பெற்று இருக்கிறது. அந்த கண்ணியத்துடனே அதை விட்டு இருக்கணும். அப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு பெரிய நடிகரா இருக்காரு. அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி நல்ல விளக்கு ஓடிடி தளத்திற்கு விற்று இருக்கணும். அப்படி பண்ணி இருந்தா தேவைப்படுறவங்க அந்த படத்தை ஓடிடில போய் பார்த்து இருப்பாங்க" என பேசி இருந்தார் இயக்குநர் அமீர்.
இதற்கு முன்னர் இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் வெளியான 'கூழாங்கல்' படம் கூட சர்வதேச விருதுகளை பெற்றது ஆனால் அதை தியேட்டரில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.