இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே பருத்தி வீரன் படம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றை காணலாம்.
பருத்தி வீரன் படம்
கடந்த 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் ‘பருத்தி வீரன்’ படம் வெளியானது. கார்த்தி இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் பிரியாமணி, பொன்வண்ணன், சமுத்திரகனி, சரவணன், கஞ்சா கருப்பு, சுஜாதா சிவகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பிரியாமணிக்கு கிடைத்தது. இப்படி பல பெருமைகளை கொண்ட பருத்திவீரன் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்த படம் வெளியான சமயத்தில் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே பிரச்சினை வெடித்திருந்தது.
17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சர்ச்சை
இந்த பிரச்சினையை கிட்டதட்ட தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்தே போய்விட்டார்கள் என்றே சொல்லலாம். இப்படியான நிலையில் தான் நவம்பர் மாத தொடக்கத்தில் ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படம் கார்த்தியின் 25வது படம் என்பதால் அதனை சிறப்பிக்கும் விதமாக அவர் படங்களை இயக்கிய இயக்குநர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கார்த்தியை பருத்திவீரன் மூலம் நடிகராக அறிமுகம் செய்த அமீர் பங்கேற்காதது சர்ச்சைகளை கிளப்பியது.
இதுதொடர்பாக அமீரிடம் கேள்வியெழுப்பியபோது அவர் பருத்திவீரன் பட சம்பவத்தைப் பற்றி பேச பிரச்சினை மீண்டும் வெடித்தது. தொடர்ந்து ஞானவேல்ராஜா அமீரால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அவர் ஒரு திருடர் என தரக்குறைவாக பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பிரச்சினை பெரிதானது. அமீருக்கு ஆதரவாக சமுத்திரகனி, சசிகுமார், சுதா கொங்காரா, நடிகர் பொன்வண்னன், கவிஞர் சினேகன் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பருத்தி வீரன் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சூர்யா, கார்த்தி என யாரும் கருத்து சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன் நடந்த சம்பவம்
இப்படியான நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. அது ஜப்பான் பட நிகழ்ச்சியில் கார்த்தி மற்றும் சூர்யா பேசியது தான். அது என்னவென்று பார்க்கலாம்.
கார்த்தி
நடிப்புன்னா என்னென்ன தெரியாதவனிடம், காலத்துக்கும் நிற்கக்கூடிய பருத்திவீரன் கேரக்டரில் நடிக்கவச்சி ஒவ்வொரு அசைவும் அணு அணுவாக சொல்லிக்கொடுத்தது அமீர் தான். அவரின் பாதம் தொட்டு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்ம மேல நம்மை விட அதிகமாக நம்பிக்கை வைக்கிற நண்பன் இருந்தால் எதுனாலும் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் நான் தான். அதற்கு காரணம் ஞானவேல் ராஜா தான். ‘நீ வந்து இயக்குநர் எல்லாம் கிடையாது. முதல்ல நடி, அப்புறம் மத்ததை பார்த்துக்கலாம்’ என சொல்லி நான் படம் எடுக்குறேன் சொல்லி ரிஸ்க் எடுத்தது அவர் தான். என் அப்பாவின் இடத்தில் இருந்து படம் எடுத்தது ஞானவேல் தான்.
நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சேர்ந்து உழைச்சி தான் இங்க வந்துருக்கோம். அதனால் என்னை வாரிசு நடிகரா என கேட்டால் அதெல்லாம் இல்லை. ஆனால் பருத்தி வீரன் ரிலீஸாவதில் பெரிய பிரச்சினை இருந்தது. அப்போது அண்ணன் (சூர்யா) தான் அவரின் சேமிப்பு எல்லாம் கொடுத்து தான் ரிலீஸ் ஆச்சு.3 முறை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோனது.
சூர்யா
கமல் சார் பூஜை போட்டு ஆரம்பிச்ச படம் பருத்தி வீரன். கார்த்தி இங்க இருக்க மிக முக்கிய காரணமானவர்களில் ஒருவர் இயக்குநர் அமீர். மணிரத்னத்துக்குப் பிறகு கார்த்தி சினிமாவில் இருக்க காரணம் ஞானவேல் தான். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, யாராலும் மறக்க முடியாத படத்தை கொடுத்த இயக்குநர் அமீருக்கு இந்த தருணத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.