தமிழ் சினிமாவில் பிரபலமான  நடிகரும் தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 


 



மருத்துவமனையில் அனுமதி :


கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதி இருமல், சளி , தொண்டை  வலி உள்ளிட்ட  பிரச்சினைகளால் போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் மருத்துவமனை வெளியிட்டுள்ளார் அறிக்கையின் பேரில் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும்  உடல்நிலை சீராக இல்லை என்றும் நுரையீரல் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது என்றும் வெளியான தகவல் பரபரப்பை  ஏற்படுத்தியது. 


 


பிரேமலதா விளக்கம்:



விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவிய வதந்தியால் மனமுடைந்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா வீடியோ மூலம் விளக்கம் ஒன்றை கொடுத்து இருந்தார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து கட்சி தொண்டர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் தேவை இல்லாமல் யாரும் பயப்பட  வேண்டாம்,  வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார். 


 



 


அமீர் அறிக்கை :


இந்த நிலையில் இயக்குநரும் நடிகருமான அமீர் விரைவில் விஜயகாந்த் உடல்நலம் தேறி வர வேண்டும் என கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "திரையுலகின் நான் கண்ட நல்ல மனிதர்களில் முக்கியமானவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இல்லை என்ற தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன். வாடிய பயிரை, பசியினால் இளைத்தோரை, பிணியால் வருந்துவோரை ஏழைகளாய் உழல்வோரை கண்டு உளம் பதைத்த வள்ளலாரைப் போல நம்மிடையே திகழ்ந்த தன்னலமற்ற மனிதநேயப் பண்பாளரான அவர், "இலனென்றும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள" எனும் குறள் வழி வாழ்ந்த ஈகைத் தமிழன் - கேப்டன் விரைவில் உடல் நலம் பெற்று சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் தாளில் இறைஞ்சுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 


அதே போல பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் விஜயகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என ட்வீட் செய்து இருந்தார். ரசிகர்கள், தொண்டர்கள்  பலரும் விஜயகாந்த் உடல்நிலை சீராகி வீடு திரும்ப சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவரின் உடல்நிலை தேற பிராத்தனை செய்து வருகிறார்கள்.