ஆஸ்கர் விருதை நான் பெரிதாக நினைக்கவில்லை என நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிக்கையாளரை சந்தித்த இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். 


செங்களம் என்ற இணைய தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் 24 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது.இந்த தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்த செங்களம் தொடரின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், இயக்குநர் அமீர், வாணி போஜன், டேனியல், விஜி சந்திரசேகர், பிரேம், கஜராஜ், இசை அமைப்பாளர் தரண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமீர், செங்களம் கதையும் என்னை நினைத்து தான் இந்த இயக்குநர் எழுதியுள்ளார்.  இந்த ட்ரெய்லரை பார்த்தவுடன் இதில் நடித்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சி இருந்தது. அப்போதே எஸ்.ஆர்.பிரபாகரன் வெற்றி பெற்று விட்டார் என தெரிவித்தார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீரிடம், ஆஸ்கர் விருது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு என்னை பொறுத்தவரையில் ஆஸ்கர் விருது அந்நாட்டின் தேசிய விருது தான். அதை என்றைக்கும் நான் பெரிய விருதாக கருதியது கிடையாது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை. அவ்வளவு தான் எல்லாம். கடைசியாக தேவர் மகன் படத்தில் நடித்ததற்காக சிவாஜிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய சிவாஜி, இது கொடுக்கப்படவில்லை. அந்த குழுவில் இருந்த நம்முடைய ஆட்களால் வற்புறுத்தி கொடுக்கப்பட்டது என தெரிவித்தார். 


மேலும் "30 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சிறந்த விருதுகள் என்பது எல்லாமே முடிந்து போச்சு. இப்ப எல்லாம் விருதுகள் எல்லாமே லாபி தான். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 


2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி படம் வெளியாகியிருந்தது. அதில் நடித்ததற்காக ரஜினிகாந்திற்கு சிறந்த நடிகர் என்ற பிரிவில் மாநில அரசின் விருது வழங்கப்பட்டது. ரஜினியை சிறந்த நடிகர் என சொல்ல முடியுமா?. அவர் சிறந்த என்டர்டெயினர். ஆனால் சிவாஜி படத்தில் சிறந்த நடிப்பு இருந்ததா? அந்த படத்திற்காக பத்திரிக்கையாளர் ஞானியுடன் நான் விவாதம் ஒன்றை நடத்தினேன். ரஜினியின் சிறந்த நடிப்பு வெளிப்பட்ட  முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை படத்திற்கு ஏன் விருது கொடுக்கப்படவில்லை. விருதுகள் எல்லாமே ஒரு லாபி தான்" என அமீர் தெரிவித்துள்ளார்.