நடிகர் அஜித்குமாரை சந்திக்க தான் 8 ஆண்டுகளாக காத்திருப்பதாக பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ரசிகர் ஒருவரின் கமெண்டிற்கு பதிலளித்துள்ளார். 


இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த அல்போன்ஸ் புத்திரன், பல குறும்படங்களை இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியாவை முதன்மை கதாபாத்திரங்களாக கொண்டு ‘நேரம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் எடுக்கப்பட்ட இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 


இதனையடுத்து இரண்டாவதாக   நிவின் பாலி ஹீரோவாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என 3 ஹீரோயின்களை கொண்டு ‘பிரேமம்’ என்ற படத்தை எடுத்திருந்தார். திரைக்கதையில் காட்டியிருந்த மேஜிக்கால் இன்றளவும் கொண்டாடக்கூடிய படங்களில் ஒன்றாக இது அமைந்தது. இதனைத் தொடர்ந்து 7 ஆண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்த அல்போன்ஸ் புத்திரன் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்ற மலையாளப் படத்தை இயக்கியிருந்தார். 






இந்த படம் கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. இதனிடையே ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அல்போன்ஸ் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் ”அஜித்தை வைத்து படம் இயக்க வேண்டுமென ரசிகர் கேட்டுக் கொள்கிறார். அதற்கு அஜித்குமாரை என்னால இதுவரைக்கும் மீட் பண்ண முடியல. நிவின் பாலி ஒருமுறை என்னிடம்,  அஜித் பிரேமம் படம் நல்லா இருக்குது என்றும், அதில் காலேஜ் இன்ட்ரோ சீன், களிப்பு பாடல் தனக்கு பிடித்ததாக சொன்னதாகவும் கூறினான்.


அதன்பிறகு குறைந்தது 10 முறை நான் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் அவருடன் மீட்டிங் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுமாறு சொன்னேன். 8 வருடங்கள் கடந்துடுச்சு. வயசாகுறதுகுள்ள அஜித்தை பார்த்தேன் என்றால் நல்ல படம் பண்ணுவேன். நீங்க ஒவ்வொரு வாட்டியும் இந்த கேள்வி கேட்கும்போது எனக்கு எவ்வளவோ வலிக்கும் தெரியுமா?.. நான் முயற்சி பணி வெறுத்து போய்ட்டேன்.


நீங்க கேட்கும் போது முதல்ல எனக்கு கோபம் வரும். அதன்பிறகு நீங்களும் என்ன மாதிரி ஒரு அஜித் ரசிகரா இருக்கலாம்ன்னு நினைச்சி பாக்காத மாதிரி போயிடுவேன். ஒருவேளை நான் அஜித்தை வைத்து படம் பண்ணால் கண்டிப்பாக ஹாலிவுட்டின் தியேட்டரில் திரையிடப்பட்டாலும் அந்த படம் 100 நாட்கள் ஓடும். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோரை வைத்து படம் செய்ய ஆசைப்படுகிறேன் எனவும் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.